’இரவின் நிழல்’ சில மனிதர்களின் நிழல்களை வெளிச்சம் போட்டு காட்டும்
பாபம் செய்யாதிரு மனமே!
யமன் கோபம் செய்தே நாளை கொண்டோடிப்போவான். - கடுவெளி சித்தர்.
‘ஒத்தசெருப்பு’ படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பெருமை பார்த்திபனை சாரும். ஆம், இயக்குநர் & நடிகர் பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘இரவின் நிழல்’ சிங்கில் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. படம் எடுக்க அவர் மற்றும் அவரது குழுவினர் பட்ட சிரமங்களை எல்லாம் முதல் அரை மணிநேர கதை கூறுகிறது. சாதிக்கும் எண்ணம் இருந்தால் போதும் இயற்கையை துணை நின்று உதவிசெய்யும் என்பதற்கு இப்படமே ஒரு ஆதாரம்.
மசாலா திரைப்படங்களை மட்டுமே எடுத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணும் இயக்குநர்கள் மத்தியில் ரசிகர்களை நம்பி எந்த ஒரு புதுமுயற்சியாக இருந்தாலும் அதை வரவேற்பார்கள் என்ற அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை (குறிப்பாக தமிழ் ரசிகர்கள்).
வறுமை & பசியின் பிடியில் சிக்கி தவிக்கும் யாரும் இல்லாத ஆதரவற்ற சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். அதன்பிறகு அவன் வாழ்க்கையில் நடைபெறும் சம்பங்களே இப்படத்தின் கதை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் தனது 10 வயது முதல் 48 வயது வரை ஒருவன் படக்கூடிய வலிகளை மிக அழகாக செதுக்கியிருக்கிறார் பார்த்திபன். பெரும்பாலும் மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சமுதாயத்தின் மீதோ, விதியின் மீதோ அல்லது மற்றவரின் மீதோ பழிபோடுவான். ஆனால் எது எப்படி இருந்தாலும், பாவம் பாவம்தான். வட்டிக்கடையில் தொடங்கி அரசியல், ஆன்மிகம் வரை பாவம் நீள்கிறது. உலகில் உள்ள அனைவரையும் ஏமாற்றினாலும் தனது மனசாட்டியை ஒருவனால் ஏமாற்ற முடியாது. அதற்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. இதுதான் இப்படத்தின் கதைக்கரு.
இவ்வுலகில் இரண்டு மட்டுமே பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. ஒன்று நிர்வாணம் ( பாலியல் இச்சை) மற்றொன்று ஆன்மிகம். இந்த இரண்டையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் பார்த்திபன் சாரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். பாவம் செய்தால் தப்பில்லை என்று மதில்மேல் பூனைப்போல் சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் தெளிவான பாதை காண்பிக்கும் ஒளிதான் இந்த ‘இரவின் நிழல்’ (shadow of night). பாதையில் நாமும் பயணிப்போம். மரணம் இல்லா பெருவாழ்வை நோக்கி...
நீண்ட நாட்களுக்கு பின் சித்தர் பாடலில் மனம் மயங்கிய நாள். படத்திற்கு என்று இப்பாடலை தேர்ந்தெடுத்து வழங்கிய ஏ.ஆர்.ரகுமான், மரணம் இல்லா பெருவாழ்வு பெற்றிருப்பார்.
சொல்லருஞ்சூது பொய் மோசம் செய்தாற் சுற்றத்தை,
முற்றாய்த் துடைத்திடும் நாசம்...
நல்ல பக்தி, விசுவாசம், எந்தநாளும் மனிதர்க்கு
நன்மையாம் நேசம்.
பாபம் செய்யாதிரு மனமே!
யமன் கோபம் செய்தே நாளை கொண்டோடிப்போவான்.
பாவம் செய்யாதிரு மனமே... -கடுவெளி சித்தர்.
என்னுடைய வாழ்நாளில் முதல் காட்சி பார்த்தப்பிறகு என்னுடைய ரிவிவ் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட தருணம் இதுவே முதல்முறை. மறக்க முடியாது. பல திரையரங்குகளில் படம் பார்த்திருந்தாலும், சென்னையில் பார்த்த அனுபவம் மிகவும் அழகானது.உன்னுடைய வாழ்வில் மிகவும் மறக்க முடியாத தருணங்கள் எவை என்று கேட்டால் என்னால் விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஏனெனில் நான் எதிலும் அவ்வளவு எளிதாக திருப்தி அடைய மாட்டேன். அந்த வகையில் இந்த நிகழ்வு மறக்க முடியாதது. யாருக்கு தெரியும்? இன்னும் எத்தனை திருப்பங்கள் காத்திருக்கிறதோ!
https://www.youtube.com/embed/TfP78ycggIg
வாழ்க்கை அழகானதா என்று சத்தியமாக தெரியாது. ஆனால் கடக்கிறேன். கடக்க கற்றுக்கொண்டே இருக்கிறேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணாமல், தீங்கு விளைவிக்க முற்படாமல் நகர்கிறேன், இறைவனின் ஆசியுடன்.
Comments
Post a Comment