Posts

Showing posts from February, 2023

அவளுக்கொரு முத்துச்சரம்

Image
 மூன்றெழுத்தில் அவளுக்கொரு முத்துச்சரம் படைக்க எண்ணினேன் முத்தமிழும் தித்திக்குது என்னிடம்... சொக்கனுக்கு வாய்த்த சுந்தரியாய் , சொக்க வைக்கிறாள், இந்த சுந்தரனை! பண்பின் முன்னிலையாய்... பத்தின் இடைநிலையாய்.... அம்மாவின் கடைநிலையாய்.... அவளுக்கோர் அர்ச்சனை! அன்பு என்றால் அவள் தான்! அறம் என்றால் அவள் தான்! இதழென்றால் அவள் தான்! இம்சையின் அகராதி அவள் தான்! அரிதாக புன்முறுவல் பொழிவாள்! எனை அவள் பாதி ஆக்கிவிடுவாள்... மௌனத்தின் மகாராணியவள்... பேசினால் மல்லிகையின் மணம் வீசும்... மரிக்கொழுந்தும் மயங்கிவிடும்! அவள் கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் என் எழுத்துக்களின் மாத்திரையும் தடுமாறும்.... ஈரெழுத்து விலங்குகளை எல்லாம் உச்சிக் கொட்டி ரசிக்கின்றாள்! இந்த ஆறெழுத்து விலங்கை மட்டும் அவமதிப்பதேனோ? ஒரு வினாடியில் அவளின் இரு விழி அசைவு போதும் என் ஆயுள் இன்னும் நீளும்!

அருட்பா!

Image
என்னுள் இருந்து என்னுள் கலந்து என்னுள் மலர்ந்து என்னுள் இனித்தாய்! எனை அறிய வைத்தாய்! ஊன் குறைய வைத்தாய்!  உள்ளம் தெளிய வைத்தாய்!  காதலிக்க கற்றுக் கொடுத்தாய்!   அழுகையின் சுகம் தந்தாய்!  ஆறுதலாய் நீயே வந்தாய்!  பொறுமையை சொல்லித் தந்தாய்!  புது உலகம் நீ படை என்றாய்!  வெறுமையை விலக்கி வைத்தாய்!  ஊக்கம் தருவேன் ஓடென்றாய்! ஓடுகிறேன் உன் தயவால்! வெற்றியாக நீயே வருவாய் ! அப்பா.. அப்பா...அம்மையப்பா... நீ என் அன்னையப்பா!  உன்னையல்லால் வேறு தெய்வம் இல்லையப்பா!   தித்திப்பா! இனிப்பா! கரும்பா!  சொற்களில் இல்லை உன்னை வர்ணிக்கும் 'பா' .. அப்பா... இது நான் எழுதும் அருட்பா! என்னை அரவணைத்து அருளப்பா.... ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! ஓம் நமசிவாய!!!  

பேரழகு

Image
 அவள் உச்சரித்த பின்பு தான் தெரிந்தது என் பெயர் அவ்வளவு அழகென்று.... 4-5 முறை பார்த்திருப்பேன்...  அவள் திரும்பி கூட பார்த்தில்லை...  அரக்கி, கிறிக்கி, சிரிக்கி என்று பொறுக்கியாய் வசைபாட தோன்றும்! ஆயினும், கள்ள, கபடமில்லா சிரிப்பும், குழந்தைத்தனமான பேச்சும் எனக்கு எக்களிப்பை கொடுக்கும்...  அவளை எப்படி வசைப்பாடுவேன் ?  இதோ உச்சரித்து விட்டாள் என் பெயரை உருக்கி! எனக்கு மீண்டும் எக்களிப்பு! மச்சக்காரி மனதில் என்ன ரகசியமோ!  

உனக்கு ஒரு முத்தம்

Image
 நான் அழும்போதெல்லாம் தலைசாய மடி கொடுத்தவன்... நான் பாடும் போதெல்லாம் என் ஒலியை எதிரொலித்தவன்! என் சிரிப்பை சிந்திக்க வைத்தவன்! என் அந்தரங்கத்தை முழுதும் அறிந்தவன்! என் ஆறுதலின் ஆலமரம் அவன்.... எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்றும் என்றும் என்னோடு பயணிப்பவன்.... கண்ணாடியின் காதலன் அவன்,  "குளியலறை கதவு".

மந்தாகினி

Image
 பேருந்தில் பக்கத்து சீட்டு. அன்று அவள் அரிதாரம் பூசவில்லை ஆயினும் அழகாய் ஜொலித்தாள்..! ஒன்றரை அடி நீளத்தில் போனி ஹேர் ஸ்டைல்.  தலைக்கோத ஏதுவாக இடதுபுற நெற்றியில் வழிந்தோடும் அருவியாய், சிறிய கொத்தான மயிர் இழைகள்... தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் சிறிய வட்ட வடிவிலான கருப்பு நிற பொட்டு...  அவளை வர்ணிக்க வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தேன்...  பொத்தென்று ஒரு சத்தம்! பதறி போய் திரும்பினேன், அவள் சிதறிப்போய் கையில் எடுத்தாள்..., மஞ்சள் வண்ணத்தில் சீப்பு.  ஹேண்ட் பேக்கில் அவளின் கைகள் ஏதோ துலாவிக்கொண்டிருந்தன.. மிச்சராகவோ, காரா பூந்தியாகவோ இருக்க வேண்டும். அதை நமக்கும் தருவாளா? என மனம் ஏங்கியது. நினைத்து முடிப்பதற்குள் ஸ்கார்ப் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டாள்.  இறுதியாக, மயில் இறகின் டாட்டூ குத்திய அந்த கைகளில் ப்ளூடூத் ஹெட்செட்.  சேலை மட்டும் கட்டி இருந்தால் மப்பும் மந்தாரமாய் இருந்திருப்பாள்...  சுடிதார் அணிந்து வந்ததால் தற்போது எட்டிப் பார்க்கிறது தொப்பை....!!!  

நீ வருவாயா....!

Image
 அழகை அணு அணுவாய் ரசித்து ருசிக்கும் ஆத்மார்த்த தம்பதிகளுக்கே தேவதைகள் பிறக்கின்றனர்... அத்தேவதைகள் சினுங்கினால் சில்மிஷம் சீண்டினால் பரவசம்... கண்கொத்தி பாம்பாய் கண்ணால் கொத்தும் போது அடி மனதில் ஆலகால விஷம் பரவுகிறது... அதை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நீலகண்டனாய் தவிக்கிறேன் நான்... என் விஷத்தை முறியடிக்க சிவகாமியே நீ வருவாயா....!