உடல் எனும் அற்புதம்
அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே
பிண்டத்திலே உள்ளது அண்டத்திலே
என்று சித்தர்கள் கூற கேட்டிருப்போம். இதன் பொருள் நம் உடலானது இயற்கையின் அம்சம் நிறைந்தது. இந்த பூமியில் உள்ள பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, ஆகிய அனைத்தும் நம் உடலில் உள்ளது. இந்த பஞ்ச பூதங்களான அனைத்தும் சேர்ந்துதான் நம் உடலின் அனைத்தும் உறுப்புகளும் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த உடலை மூன்று வகையாக சித்தர்கள் பிறித்து கூறுகின்றனர். அதாவது வாதம், பித்தம், சிலேத்துமம்
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்குவர்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானல், ஒருவர் உடல் வெப்பம் நிறைந்த உடலாகவோ, குளிர்ச்சி நிறைந்த உடலாகவோ, அல்லது வாயு நிறைந்த உடலாகவோ இருக்கும்.
இவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை தன் உடம்பு ஏற்றுக்கொள்கிறதா? என்பதை அறிந்து அதற்கு தகுந்தவாறு உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் நம் உடம்புக்கு ஏற்படும் அனைத்தும் ஒவ்வாமையையும் தீர்க்கக் கூடிய மருந்து இந்த பூமியிலேயே இறைவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் உடலானது மிகவும் அற்புதம் நிறைந்த ஒரு அழகான ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில்தான் அருட்பெருஞ்சோதியாக விளங்கக்கூடிய பொன்னிற மேனியனாக இறைவன் இருக்கிறான்.
அந்த இறைவன் இருக்கக் கூடிய இந்த ஆலயத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வது நம் முக்கியமான கடமையும் பொறுப்புமாகும். இதில் இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை நாம் உணவை வீனடிக்க கூடாது என்பதற்காக பழைய உணவுகளை ( கெட்டுப்போன உணவுகளை) உட்கொள்கிறோம். அல்லது அதை சூடு செய்து சாப்பிடுகிறோம். இது நாம் நம் உடலுக்கு நாமே எடுக்கும் மெல்ல, மெல்ல கொல்லும் விசத்துக்கு சமமாகும்.
இதை அவ்வைப்பாட்டி
முதல் நாள் பண்டம் அமிர்தமாக இருந்தாலும் அதை அடுத்த நாள் தொடக்கூடாது என்கிறாள்.
இறைவனின் படைப்பில் நம் உடலானது 70 சதவீததிற்க்கு மேல் நீரால் ஆனது. நாம் இறந்த பிறகு இந்த உடலானது உருகுலைந்து மண்ணோடு மண்ணாக மக்கும் வடிவில் செய்யப்பட்டுள்ளது. அந்த உடம்பினுள்தான் இறைவன் இருந்துகொண்டு நம்மை இயக்குகிறான் என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவே முடிந்தவரை உணவை வீணடிக்காமல் , அதே சமயம் உணவு வேண்டி வருவோருக்கு முடிந்தவரை உணவளித்திட வேண்டும்.
ஒருவேளை உணவு வீணாகிவிட்டது என்றால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம், அதை கீழே கொட்டி விடுங்கள் நமக்கும் தெரியாமல் நம் கண்ணுக்கு புலப்படாமல் எத்தனையோ சீவ ராசிகள் இம்மண்ணில் வாழ்கின்றன. அவை அவற்றை உண்டு வாழும். அவ்வாறு இல்லாமல் அதை நானே சாப்பிட்டுகொள்கிறேன் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் நம் உடலானது அதை சீரணிக்க படாதபாடு படும். அந்த கழிவுகளை வெளியேற்ற முடிந்தவரைப் போராடும். இதை தொடர்ந்து நாம் செய்தோமானால் உடல் உறுப்புகள் அதிகமாக இயங்க வேண்டிய சூழல் உருவாகும்.
அந்த நிலையில் அவை முடிந்தவரை அவற்றை வெளியேற்றப்போராடும். உடல் உறுப்புகள் சோர்வு அடையும் போது கழிவுகள் வெளியேற முடியாமல் நமக்கு பல்வேறு வியாதிகள் வருகின்றன. நாம் இறைவனை நேசிக்கிறோம் என்றால் முதலில் நாம் நம் உடலை நேசிக்க வேண்டும். நம் உடலில் வீண் கழிவுகள் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு வேளை மலம் கழித்தல் அவசியமாகும். தண்ணீர் தேவைப்படும்போது மட்டுமே குடிக்க வேண்டும். முடிந்த வரை அசைவ உணவை தவிர்க்க வேண்டும். நான் ருசியாக சாப்பிட விரும்புகிறேன், நாக்கை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் மாதம் ஒருமுறை என நீங்கள் விரும்பும் அந்த ருசியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள் . நாம் நம் வெளித்தோற்றத்தை எவ்வாறு ரசிக்கிறோமோ! அதேப் போன்று நம் உள்ளுறுப்பையும் அதற்கு பிடிக்காததுப் பற்றியும் அறிந்து கொண்டு அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நம் உள்ளத்தையும் நாம் ரசிக்க வேண்டும்.
நாம் நம் உடலை நேசிக்கும்போது அது நம்மை நேசிக்கும். அவ்வாறு நாம் நேசிக்கும் போது நாம் நம் உடலை விட்டு தனியாக இயங்கும் உணர்வை நம்மால் உணர முடியும். நமக்கும் , இறைவனுக்குமான பந்தத்தில் முக்கிய பங்கு வகிப்பது நம் உடலாகும். இதை அறிந்து நாம் நம் உடலை பாதுக்காக்க முற்படும்போது நமக்குள் ஒரு உற்சாகம் தோன்றும். இதுதான் நம் வாழ்வின் தொடக்கம் ஆகும்.
அது நமக்காக பல்வேறு பாடங்களை கற்றுத்தர காத்திருக்கும். அந்த தொடக்கத்தில் வாழ்வின் அழகான தருணங்களை எதிர்ப்பார்த்து பயணிப்போம்...இனிமையாக.....ஆரோக்கியமாக.....
( மீண்டும் சந்திப்போம்)
Comments
Post a Comment