பாவக்கதைகள்
பாவக்கதைகள்
நான்கு வெவ்வேறு கதைகள் மனித நேயம் எனும் ஒரே கோட்டில் பயணம் செய்யும் வலி மிகுந்த உணர்வுகளால் நம்மை காட்சி வழியே கடத்தும் படம்தான் பாவக்கதைகள். பெண்களின் வலியையும், வாழ்க்கைப் போராட்டங்களையும், பெண்விடுதலையின் அவசியத்தையும் கூறும் படம்தான் இந்த பாவக்கதைகள்.
முதல் கதை: 1980 காலகட்டத்தில் மதமாறிய காதல், திருநங்கையாக மாறிவரும் சத்தாரின் மனநிலை, அவன் எதிர்கொள்ளும் சமூகப்பிரச்சனைகள், மனப்போராட்டம், மூன்று பெண்களுக்கு அண்ணனாக பிறந்த சத்தார் பெண்ணாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத அவன் பெற்றோரின் மனநிலை, நண்பன் தங்கம் மீது தான் கொண்ட காதலுக்காக (அன்பிற்காக) தன்னையே அர்ப்பணிக்கத் துணியும் தியாகம் இவற்றையெல்லாம் மிக அழகாக அந்த காலத்தின் சூழ்நிலைக்கேற்ப அழகுப்பட சொல்லியிருக்கும் கதைதான் இப்படம். படத்தில் சர்த்தாரின் வலியை நம் வலியாக காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்குரா.
இரண்டாம் கதை: ஆதிலட்சுமி,ஜோதிலட்சுமி இருவரும் ஒன்றாகப் பிறந்த இரட்டையர்கள். இதில் ஆதிலட்சுமி அவள் விட்டில் வேலைப்பார்க்கும் டிரைவர் மீது காதல் கொள்கிறாள். அவனை திருமணம் செய்ய விரும்பி அப்பாவிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். பெரும்செல்வந்தராகவும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் சாதியதலைவராக உள்ள அவளது அப்பா, அவள் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வஞ்சகமாக கரண்ட்ஷாக் வைத்து கொள்கிறார். இதையறியாமல் சகோதரி திருமணத்திற்கு வரும் ஜோதிலட்சுமி, அவள் காதலையும் தெரிவிக்க, லெஸ்பியன் காதலோ என ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் சமயத்தில் கதையில் திருப்புமுனை செய்திருப்பது இயக்குநர் விக்னேஷ் சிவனின் அழகு. பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதையின் மீதி பலம்.
மூன்றாம் கதை: அழகான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பெண்குழந்தை பொன்னுத்தாயி சில ஆண் மிருகங்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். சிறுமியை காணவில்லை என பெற்றோர் தேடி வரும் நிலையில் இந்தச் செய்தியை கேட்டு உடைந்து, உருகுலைந்து போகின்றனர். காவல்துறைக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில், அக்கம்பக்கத்தினருக்கு அஞ்சி பொன்னுத்தாயை கொலைசெய்து விடலாமா? என நினைக்கும் அவள் அம்மாவின் மனநிலை நம் கன்முன்னே வந்து நம்மை மிரட்டி செல்லும். அச்சிறுமி என்ன ஆனால் என்பதே படத்தின் மீதிக்கதை. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் படைப்புகளில் இது காலம் கடந்து நிற்கும் என்றால் அது மிகையாகாது.
நான்காம் கதை: அக்கா,தம்பிகளுடன் பிறந்த சுமதி சாதிமாறி திருமணம் செய்து வெளியூருக்கு சென்று வசித்து வருகிறாள். நிறைமாத கர்பிணியான அவளுக்கு சீமந்தம் செய்ய அழைத்து செல்வதாக கூறி சுமதியின் அப்பா தன் சொந்த வீட்டிற்கு அழைத்து செல்கிறார். சீமந்தத்திற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடக்க மறுபுறம் அவளது உடன்பிறப்புக்கள் அவளை வெறுக்கின்றனர். விடிந்தால் சீமந்தம் என்ற நிலையில் அனைவரையும், சீமந்தம் நடைபெறவுள்ள மண்டபத்திற்கு அனுப்பி வைக்கிறார் சுமதியின் அப்பா. பின் அந்த வீட்டில் அவள், அவளது அப்பா மற்றும் அம்மா என மூவர் இருக்கின்றனர். அச்சமயம் சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனரா?இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. இயக்குநர் வெற்றிமாறன் வலி மிகுந்த உணர்வுகளால் காட்சி படுத்தியிருப்பது கதைக்கு கூடுதல் பலம்.
இந்த நான்கு கதைகளும் நம்மோடு பின்னிப்பிணைந்தவை. நாம் நமக்கு விரும்பம் இல்லாமல் இந்த சமூகத்திற்காகவோ, சாதிய பெருமைக்காகவோ அல்லது மற்றவருக்காகவோ செய்யும் அறுவறுக்கத்தக்க செயல்களின்(பாவங்கள்) வெளிப்பாடுதான் இந்த பாவக்கதைகள்.
சர்தார் மானத்திற்காகவும், உயிருக்காகவும் தவிக்கும் போது அவனுக்கு உதவ வராத அவன் தந்தையும், பதவிவெறியில் சாதிய மனப்பாங்கில் சொந்த மகளையே கரண்ட் சாக் வைத்து கொள்ளும் வீரசிம்மனும், பொன்னுதாயை கொலைச்செய்ய துணியும் மனநிலைக்கு உள்ளாகும் மதியும், தன் சாதிக்காக, நிறைமாத கர்பிணியான தன் சொந்த மகளை கொல்லும் ஜானகிராமனும் , சிறு குழந்தையென்றும் பாராமல் வண்கொடுமை செய்யும் இளைஞனும் வேறு யோரோ இல்லை.
அவர்கள் அனைவரும் நம் மனதிற்குள் இருக்கும் வெளிவராத மிருகங்களே.. அவை எப்போதும் வெளிவராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
பாவக்கதைகள் புன்னியப்பாதையில் நம்மை அழைத்துச்செல்லும்.
Comments
Post a Comment