ஜெய்பீம் - பலகோடி மக்களின் கண்ணீர்துளி

 எந்த ஒரு படைப்பு நம் ஆழ்மனதை உலுக்குகிறதோ...

எந்த ஒரு படைப்பு நம் கண்களில் கண்ணீர் வர வைக்கிறதோ.. 

எந்த ஒரு படைப்பு நம்மை தூங்கவிடாமல் செய்கிறதோ..

அதுவே ஆகச்சிறந்த படைப்பு! அந்த வகையில் ஜெய்பீம் ஒரு ஆகச்சிறந்த உன்னதமான படைப்பு!

அதிகார வர்க்கத்தையும், சாதிய திமிர் கொண்ட மனிதர்களையும் அவர்களின் மனசாட்சியை உலுக்கி கேள்வி எழுப்பி அவர்களை தூங்கவிடாமல் மனிதத்தை துளிர்க்கச் செய்யும் அற்புதமான படம் தான் ஜெய்பீம்.

உண்மையில் நடந்த  பழங்குடியின மக்களின்(இருளர்) வாழ்க்கையில் இழைக்கப்பட்ட அநீதிகளையும், இன்றும் திக்கற்றவர்களாய் திரியும் அவர்களின் நிலைமையையும் இப்படம் கூறுகிறது. இவர்களுக்கு அப்போது வழக்கறிஞராக போராடிய நீதிபதி சந்துருவாகவே சூர்யா வாழ்ந்திருக்கிறார்.

படத்தின் ஒவ்வோரு பிரேமும் அருமை. பாம்பு பிடிக்க செல்லும் போது பைக்கில் அமர்ந்து செல்லும் ராஜக்கண்ணு. அணிந்து கொள்ள காலணி கூட இல்லாமல் சைலன்சர் சுட்டுவிடும் என்று அதில் கால் வைக்காமல்  சிரமப்பட்டு உட்கார்ந்து செல்லும் போது அவனின் விழிப்புணர்வான அனிச்சை செயல். அவன் தனக்கு சரிசமமாக அமர்ந்து வருகிறான் என்று சைலன்சரில் அவன் கால் சுட வேண்டும் என்றே சாதிய வன்மத்தில் பைக்கை  திருகும் காட்சிகள்,பாம்பு பிடித்து முடிந்தவுடன் அவன் சாதியின் கொடுமையால் அவமானப்படுத்தப்படும் காட்சிகள் நிச்சயம் ஒவ்வொருவரையும் அவர்கள் மனது  கேள்வி கேட்கும். 

நிறைமாத கர்ப்பிணியான ராஜக்கண்ணுவின் மனைவி செங்கனியை அடித்து துன்புறுத்தும் காட்சிகள், சிறையில் ராஜாக்கண்ணுவின் அக்காவை பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாக்குவது, அவர்களின் ரத்தத்தில் மிளகாய் அரைத்து பூசுவது என அனைத்து காட்சிகளுமே கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. 

சூர்யா காலணி வாங்கிகொடுக்கும் காட்சிகள் அப்போது நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் மனதை நெகிழ செய்யும் காட்சிகள். வழக்கறிஞராக சூர்யா வாதாடும் காட்சிகள் அருமை. எங்கே சத்தமாக குரல் கொடுக்க வேண்டுமோ, அங்கே குரல் உயர்த்தி சத்தமாக பேசுவதும், ஒரு விசயத்தை எவ்வாறு சொல்ல வேண்டுமோ அவ்வாறு சொல்லும் அழகும் அழகோ அழகு..

இந்திய அரசியலைப்பின் 5வது மற்றும் 6 வது அட்டவணை பழங்குடியின மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் யாரும், எந்த அரசாங்கமும் தொந்தரவு செய்யக் கூடாது என்கிறது. அவர்கள் கல்வியற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் மலையை விட்டு வேறு வாழிடத்திற்கு செல்ல மறுத்தாலும், அவர்களை இந்திய குடிமகனாகவே கருத வேண்டும். அவர்களுக்கும் மற்றவர்களை போல அனைத்திலும் சம உரிமை உண்டு என்கிறது. 


ஆனால் நிதர்சனத்தில் அவர்கள் படும் துன்பங்கள் ஏராளம். இன்றும் பல சாதியினர் அரசு பதவிகளில் அமர்வதற்காக தங்களை மலை வாழ் மக்கள் என்று கூறி சாதிச்சான்றிதழ் பெற்று பணியில் அமரும் அவலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் தன்னை உணவருந்த விடவில்லை என்று ஒரு பழங்குடியின பெண் பேசும் வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

காடுகள் அழிக்கப்படுவதும், பல இடங்களில் ஆசிரமங்கள் அமைக்கப்படுவதும், அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் எழுப்பாததும் இப்படி  அவர்களின் வாழ்வியலை அழித்ததில், அவர்களின் துன்பத்திற்கு  ஏதோ ஒரு வகையில் நமக்கும் பங்கு உண்டு என்பதை நம்மால் மறுத்து விடவே முடியாது.

தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள், சாதிய வன்கொடுமைக்கு ஆளானவர்கள், விவசாயிகள், பாமரர்கள் என அவர்களின் சமூக நீதிக்காக குரல் எழுப்பியதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட முன்னெடுப்பை எல்லாம் தாங்கள் செய்தது போன்று திராவிட கட்சிகள்(திமுக, அதிமுக) மடைமாற்றம் செய்துவிட்டன. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தவறான ஆளுமை மற்றும் வழிகாட்டுதல் ஒரு முக்கிய காரணம். இதனால்தான் இவர்கள் கம்யூனிஸ்ட் கோட்டை என்று சொல்லி கொண்ட இடங்களில் எல்லாம் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றனர். 

இந்தியாவிலேயே தமிழத்தில் தான் அதிக காவல் மரணங்கள் நிகழ்வது போல தெரிகிறது என்றும், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சாத்தான் குளம் தந்தை மகன் மரண வழக்கில்(custodial death) கூறியுள்ளது. இதை படம் என்று சொல்வதை காட்டிலும் ஒரு சமூகத்தின் வலி என்று சொல்லலாம். அந்த வலியை ரணத்தோடு உணர்ந்து பார்வையாளர்களுக்கு அந்த ரணத்தை  கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல் ராஜா. 

ஜெய்பீம் என்றால் ஒளி

ஜெய்பீம் என்றால் அன்பு

ஜெய்பீம் என்றால் இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்

ஜெய்பீம் என்றால் பலகோடி மக்களின் கண்ணீர்துளி- மராத்திய கவிதை

 


படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம். சூர்யா திரையில் மட்டுமின்றி தன் நிஜ வாழ்விலும் அகரம் மூலம் ஒளியேற்றி வருகிறார். இதோடு நின்றுவிடாமல் சமூகத்தின் சீர்திருத்தவாதியாக தன்னை அடுத்து கட்டத்திற்கு கொண்டு சென்று இளைஞர்களுக்கு எந்த விசயம் சென்று சேரவேண்டுமோ அதை தெளிவாக கொண்டு சேர்க்கிறார்.  சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக  மனிதத்தை மீட்டெடுக்க போராடும் சூர்யாவிற்கு  மனமார்ந்த வாழ்த்துகள். 

ஜெய்பீம் - பலகோடி மக்களின் கண்ணீர்துளி

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி