அக்காவிற்கு அவள் தான் அணியிலக்கணம்

பனி படர்ந்த விடியற்காலை, குளிரில் மயிர்கால்களும் கூச்செறியும்!

அரை தூக்கத்தில் முக்காடு போர்வையுடன் கையில் கலர் பொடிகள்..

உடல் நடுங்குகிறது(என்ன தம்பி முழிச்சிட்டியா?- ஒரு குரல்)

பகலவன் துயில் எழும் முன்னே…வண்ண, வண்ண மாக்கோலங்கள்!

மயிலாய், தாமரையாய், வண்டாய், மலர் பூச்செண்டாய்…

கோயில் மணி ஓசை, இனித்திடும் சமயம்

சுவை இருக்கிறதோ, இல்லையோ அந்த சுண்டலுக்கும், பொங்கலுக்கும்!

இன்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 

தொடர்கிறது அந்த ஆனந்தம்,

கையேந்துவதை விடுவதேயில்லை…

பிராணனை பிடிக்க எழுந்திரு என்று பிராணனை எடுத்தார்கள்,

பிராணனை எடுத்தாலும் பிராணனை பிடித்திருந்தோம்!

இன்றோ இரவிலே 11 மணிக்கெல்லாம் வீட்டுவாசலை

அலங்கரிக்கின்றன மாக்கோலங்கள்.. சந்திரன் முறைக்கிறான்!

பிராணனை மட்டும் பிடிப்பதேயில்லை…

மருத்துவமனையிலும், மாத்திரையிலும் பொழுது கழிகிறது!

 

அக்கரை மருதாணி வெற்றிலாய் சிவக்கும் என்பார்கள்,

அடித்து பிடித்து ஓடி போய் பறித்ததும் உண்டு

அதில் தான் எத்தனை புறக்கணிப்புகள்…

மனம் சிவக்கும் மருதாணி கைகளை இன்று பார்க்க முடிவதேயில்லை…

அது பெண் அடிமையாம், அதனால் ஒதுக்கிவிட்டோம் என்கிறார்கள்!

அன்று கல்லூரி செல்லும் அண்ணன்கள் கைகளை

மருதாணி அலங்கரித்து கொண்டே இருக்கும்…

அவர்கள் வீடுகளில் எல்லாம் மருதாணியை ஊற்றி, ஊட்டி வளர்ப்பார்கள்!


இன்று அங்கொன்று இங்கொன்றுமாய், 

மருதாணி கைகளை பார்க்கும் போது மனம் சிலிர்க்கவே செய்கிறது… 

அதற்கு ஆண், பெண் பாகுபாடு எல்லாம் கிடையாது!

ஜல் ஜல் கொலுசொலிகள்.. அன்றோ ரசனை கிடையாது.. ஆனாலும் பிடிக்கும்.

இன்றோ அது உயிரை குடிக்கும்!

மாலை நேரத்து மயக்கம், அகல் விளக்கின் ஒளிவெள்ளத்தில் கோயில் பிரகாரங்கள்.

உள்ளே அமர்ந்திட ஏனோ ஒரு பரவசம்!

இன்றோ நேரம் கிடைப்பதேயில்லை! 

கிடைத்தாலும் மனம் செல்ல மறுக்கிறது

கோயிலும் வணிகத்தலமாக காட்சி தருகிறது.

ஏதேதோ ஞாபகங்கள்..

வண்ண , வண்ண நினைவுகள்!

ஆயிரம் அடி  விழுந்தாலும், 

அவள் அன்பு மட்டும் குறைவதேயில்லை

அக்காவிற்கு அவள் தான் அணியிலக்கணம்…

இன்று வரை வஞ்சபுகழ்ச்சி செய்ததேயில்லை!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி