அபூர்வ தம்பதிகள்

காதல் யாருக்கு எப்போது பூக்கும் என்று தெரியாது! அதுபோல தான் திருமணமும் யாருக்கு யாருடன் நடைபெறும் என்று அறுதியிட்டு கூற முடியாது! ஆனால் மனம் கொண்டவரை திருமணம் செய்யும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது.

கேரளாவின் போர்ட் கொச்சினில் அமைந்துள்ள ஆர்ட் கபேயில், அந்த கபே உரிமையாளரின் மகனான ஆனந்த் ஸ்கரியா என்பவர் மார்கஸின் நூற்றாண்டு கால தனிமை எனும் புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறார். (ஆனந்த் ஒரு இடது சாரி சிந்தனையாளர், கேரளாவின் மகாராஜா கல்லூரியில் எஸ்எப்ஐ-ல் தலைவராக இருந்தவர்) அப்போது ஸ்பெயினில் இருந்தும் லண்டனில் இருந்தும் ஒரு 25 பெண்கள் ஒரு வார சுற்றுலாவாக கேரளாவிற்கு வந்தார்கள். 

அவர்கள் அந்த ஆர்ட் கபேயில் உணவு அருந்துவதை பார்த்துக்கொண்டே அந்த புத்தகத்தை  ஆனந்த் வாசித்து கொண்டு இருக்கிறார். அப்போது காயத்ரி கேமிஸ் என்ற பெண் ஒருத்தி ஆனந்திடம் சென்று உனக்கு மார்க்ஸ் என்றால் பிடிக்குமா என்று கேட்கிறாள். அவனும் பிடிக்கும் என்கிறான். இப்படியாக அவர்களுக்குள்ளான உரையாடல் தொடங்குகிறது. ஒரு வார காலத்தில் அவர்களுக்குள் காதலும் மலர ஆரம்பிக்கிறது. 

  

காயத்ரி கேமிஸ் அவள் ஒரு பேரழகி, பார்க்கும் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் வசியம் கொண்டவள். அதிகமாக பேசமாட்டாள், சிறு புன்னகை மட்டுமே புரிபவள். அன்பினால் இந்த உலகையே தன் கட்டுக்குள் கொண்டு வருபவள். இயற்கையை நேசிக்கும் இனிமையான பெண் அவள்! 

அவள் சுற்றுலா முடிந்து ஊருக்கு திரும்புகையில் ஆனந்திடம் சென்று நீ யாரையும் திருமணம் செய்து கொள்ளாதே! எனக்காக காத்திரு, நான் லண்டனில் எம்எப்ஏ பைன் ஆர்ட்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். அது முடிய இன்னும் ஒரு வருடம் ஆகும். நான் முடித்து விட்டு வருகிறேன். எனக்கு திருமணம் நடந்தால் அது உன்னோடுதான் என்று சொல்லி செல்கிறாள். 

ஆனந்த்  இதை நினைத்து கொண்டே அரபிக்கடலை பார்த்தவாறு ஒரு பட்டாம்பூச்சியாக தனிமையில் காதலின் வேதனையை அனுபவித்து வருகிறான். அவள் கூறியவாறு ஒரு வருடம் நிறைவுபெறுகிறது. அவளும் வருகிறாள். இருவரும் ஆடம்பரம் இல்லாத ஒரு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிறார்கள். 

இப்பொழுது ஆனந்த் என்ற அந்த பட்டாம்பூச்சிக்கு காயத்ரி என்ற பட்டாம்பூச்சி துணையாகி விட்டது. இருவரும் இந்தியாவின் அனைத்து பிடித்தமான இடங்களுக்கும் சென்று ஒரு குடில் அமைத்து  சந்தோசமாக வாழ்கிறார்கள். இறுதியாக நிலையான ஒரு அமைதியான இடத்தை நோக்கி பயணம் தொடர.. திருவண்ணாமலையில் ரமண ஆசிரம் அருகே உள்ள சமுத்திர ஏரியில் குடியேறுகிறார்கள்.

அங்கு சாணியால் பூசப்பட்ட ஒரு வைக்கோலால் பிண்ணப்பட்ட ஒரு குடிசையில் வாழ்க்கையை தொடர்கிறார்கள். அந்த இடம் பெரிய அடர்த்தியான புளிய மரங்கள் நிறைந்த குடிசையின் கதவை திறந்தால் அந்த (திருவண்ணாமலை) மலை தெரியும். அப்படிப்பட்ட ஒரு இடம். அங்கு விவசாய தோட்ட பயிர்களான மா, பலா, வாழை, கொய்யா என அனைத்தையும் பயிர்செய்து அன்போடு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் காலை 5 மணிக்கு அந்த குடிசை தீப்பற்றி எரிந்து விடுகிறது. நண்பர் செல்லதுரைக்கு தெரியவர பதறி அடித்து கொண்டு ஓடிப்போய் பார்க்கிறார். அந்த வெண்மையான உடல் எல்லாம் கரி பூசிய தடங்கள். அவள் கண்களில் நீர் ததும்ப ஒன்னுமில்லை என்று கூறுகிறாள். 

சரி நாம் ஒரு கான்கீரிட் வீடு கட்டுவோம் என்று நண்பர் செல்லதுரை கூற காயத்ரி அதற்கு ஒப்புகொள்ளவே இல்லை. இந்த பூமித்தாயின் மார்பில்  ஒரு கடப்பாரை விழுவதை கூட என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறுகிறாள்.அவ்வளவு இளகிய மனம் அவளுக்கு!

பின்பு மீண்டும் தீப்பிடிக்காதவாறு ஒரு குடிலை அமைக்கிறார்கள். காயத்ரிக்கு ஓவியம் வரைவது என்றால் அவ்வளவு பிரியம். அவள் பொழுது போக்கெல்லாம் ஓவியம் வரைவதுதான். இடது சாரி சிந்தனையில் இருந்த காயத்ரியின் கணவன் ஆனந்த் தான் கவிஞனாக ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதை தொடர்கிறான். இதற்கிடையில் காய்த்ரி பிரசவம் நடக்கிறது. எளிமையாக அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை பெற்றுக்கொள்கிறாள். அவனுக்கு ஆதித்யா என்று பெயர் சூட்டுகிறாள். அவர்கள் வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருக்கிறது.

காயத்ரி நாளுக்கு நாள் தன் கணவன்மீதான காதலை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறாள். அவள் காட்டும் அன்பில் அவன் எல்லோரையும் மறந்தவனாக காயத்ரியின் ஓவியத்திற்கு உதவிப்புரிபவனாக அவளை சுற்றியே திரிகிறான். 

ஒரு நாள் அவர்கள் பக்கத்து மனையில் ஒரு பெரிய வேப்பமரம் ஒன்றை  மனைக்கு சொந்தக்காரர் வெட்ட துணிந்தபோது அதை வெட்டக்கூடாது என்று மிகப்பெரிய ரகளை செய்து தடுத்து நிறுத்தியவள் காயத்ரி. அவ்வளவு உறுதியான மனம் கொண்டவள் இன்றும் திருவண்ணாமலையில் ரமண ஆசிரம் அருகே வாழ்த்து கொண்டிருக்கிறாள். அவள் தடுத்து நிறுத்திய அந்த வேப்பமரமும் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. அங்கு மனை போட்டவர்கள் அவள் தடுத்ததற்கு பிறகு அந்த வேப்பமரத்தை வெட்டவே இல்லை.

அவர்கள் வைத்த அந்த மா, பலா, வாழை எல்லாம் தற்போது காய்த்து குலுங்கிறது. அவர்கள் குழந்தைகள் எல்லாம் பெரியவர்கள் ஆகிவிட்டனர். அவர்களுக்கு ஆதித்யா, அருணாச்சலா என்று இரண்டு குழந்தைகள். ஆதித்யா ஜெஎன்யூ பல்கலைக்கழகத்தில் தேசத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான நாகலாந்து பெண் போராளி ஒருத்தியை காதல் செய்கிறான்.

 அம்மா நான் இங்கு ஒருபெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். அப்பா எப்படியும் அந்த இடத்தை விட்டு வரமாட்டார் என்று தெரியும். நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறுகிறான். காயத்ரியும் செல்கிறாள், வெறும் 3 பேர் மட்டுமே பங்கேற்க திருமணமும் நடந்து முடிகிறது. ஆதித்யா டெல்லியில் தற்போது அந்த நாகலாந்து பெண்ணிற்கு ஸ்பானிஸ் மொழி கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறான்.

 


ஸ்பெயினில் பிறந்து லண்டனில் படித்த பெண் ஒருத்தி கேரளாவில் ஒரு பையனை மணந்து தான் பெற்ற குழந்தைகளுக்கு தமிழ்பெயர் சூட்டி திருவண்ணாமலையில் இன்றும் வாழ்ந்து வருகிறாள். ஒரு தமிழ் கலாச்சார பெண் போல மாட்டிலிருந்து செடி, கொடி, விவசாயம் என தன்னை இயற்கையோடு அர்ப்பணிந்து ஒரு ஆபூர்வமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள். அவள் வரையும் ஒவ்வோரு ஓவியமும் இன்றும் சுமார் 4 லட்சத்துக்கு விற்பனையாகிறது. 

திருவண்ணாமலைக்கு சென்றால் ஒருமுறை காயத்ரியை பார்த்து விட்டு வாருங்கள்.  நாம் வாழும் இதே காலத்தில் தான் இப்படியும் சில ஆபூர்வமான அழகான தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர்.

(எழுத்தாளர் பவா செல்லதுரையின் உற்ற தோழி இவர், காயத்ரி பற்றி பவா சொல்ல, சொல்ல இது பற்றி எழுத வேண்டும் என்று தோன்றிற்று. எத்தனை பேருக்கு இந்த தம்பதிகள் பற்றி  தெரியும் என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை தெரியாதவர்களுக்கும் இது தெரிந்தால் மனமகிழ்ச்சி அடைவார்கள் அல்லவா! அதற்காகவே இதை எழுதினேன். )


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி