வந்து எனை ஆட்கொண்டு விடு
ஆனந்தமே, அற்புதமே, அருட்பெருங்கடலே!அன்னை மடியே,
அப்பன் திருவடி நிழலே! நின்னை சரணடைந்தேன்!
வந்து எனை ஆட்கொண்டு விடு..
காதல் சுவையே.. கட்டுக்கரும்பே!
காலம் கடந்த கட்டழகே!
கம்பனை மிஞ்சும் கவித்துவம் எனக்கில்லை,
எனினும் கம்பரசத்தை மிஞ்சும் அன்புரசம்
நான் தருவேன்.. வந்துவிடு, வந்து எனை ஆட்கொண்டு விடு!
எண்ணியதெல்லாம் எனக்கு அளித்தாய்!
என்னுள்ளம் குளிர வைத்தாய்!
இன்பத்தை மட்டும் ஏனோ ஏட்டினில் வைத்தாய்!
இடையினில் ஏன் எனை மறந்தாயோ!
வந்துவிடு, வந்து எனை ஆட்கொண்டு விடு!
பற்றை எல்லாம் பற்றறுக்கும், பட்டொளி வீசிநிற்கும்
பார்புகழும் பார்வதி தேவனே..
பயம் எனும் பற்றினை பற்றாது அறுத்துவிட
பட்டென ஓடிவந்து விடு
பசலையாய் எனை ஆட்கொண்டு விடு!
சப்த, நிசப்தமின்றி பரவெளியாய் அலைகிறது மனது,
அதை மஞ்சள் நீரில் குளிப்பாட்டி
குங்கும பொட்டு வைக்க குருநாதனே
ஓடி வந்துவிடு,.. வந்து எனை ஆட்கொண்டு விடு!
முள்ளில் தைத்த இதயமாய் என்னுள்ளம் துடிக்கின்றது!
ரணத்தை ஆற்றிடவே, ராகதேவனே!
எனை நீ மீட்டிடவே..
வந்து விடு,.. வந்து எனை ஆட்கொண்டு விடு!
Comments
Post a Comment