அவளை கடக்க முடியாமல் நான்
அவளை பார்த்தபின்புதான் அன்பெனும் ஊற்று பெருக்கெடுத்தது.
திருமணம் செய்தால் அவளை போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும், அப்பெண்ணோடு பயணிக்க வேண்டும், அன்புக் கதை பேசி அளாவ வேண்டும். அவள் காணாத மற்றுமொரு உலகை காண்பிக்க வேண்டும் இப்படியெல்லாம் என்னென்னவோ எண்ணங்கள் என் மனதில் உருப்பெற்று உலாவிக் கொண்டிருக்கின்றன.
அவளுக்கு மட்டும் மறுமணம் நடந்திருந்தால் இன்று மகாராணியாக வாழ்ந்திருப்பாள்.
சாதி, சமய சடங்குளில் சிக்குண்ட அவளுக்கு ஏது மறுமணம் ?
தனிமையிலேயே வாழ்ந்துவிட்டால் தன் 80 வயது வரை....
இன்றோ, தான் பெற்று எடுத்த மகனால் தாக்கப்பட்டு நடக்க முடியாமல் கிடக்கிறாள்.
அவள் தாக்கப்பட்ட செய்தி அறிந்து துடிதுடித்து போனேன். வேறு என்னால் என்ன செய்ய முடியும்?
அவளை பார்க்க மனம் இல்லாமல் கடந்து விட வேண்டும் என்று பார்க்காதது போல் கடக்க முற்பட்டேன்.
அவளோ கண்டுபிடித்து விட்டாள். என் பெயரை கூவி அழைக்கும்போது அவளை பார்க்காமல் எப்படி கடந்து போக முடியும்?
கூரை கொட்டகையில் மண்ணோடு மண்ணாக சாய்ந்து கிடக்கிறாள்.....
சிறுநீர் நாற்றத்துடன் உடலில் 5/6 இடங்களில் சிராய்ப்புகள்....
பேசும்போதே கண்களில் கண்ணீர்....
என் மனமோ, தற்கொலை செய்து கொள்ள விரும்பி ரயிலின் தண்டவாளத்தில் படுத்திருக்கும் ஒருவன் ரயிலின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் தருணத்தை போன்று அலங்கோலமானது....
ஆறுதல் கூறவும் முடியவில்லை, விட்டு விலகவும் முடியவில்லை...
எப்படியோ அவளிடம் இருந்து விடைப்பெற்று வந்தேன்.
ஒரு சிறு நிம்மதி.... இன்றும் அவள் வளர்த்த நாய்க்குட்டி அவளுக்கு அருகிலேயே படுத்துக்கிடக்கிறது...
அவளின் வலிகளை உணர்ந்தவாறு அவள் மூச்சுக்காற்றை தான் சுவாசித்தவாறு....
ராஜாராம் மோகன்ராய், பாரதி, பாரதிதாசனை நினைக்கும்போதும் சிறு கர்வம் பிறக்கத்தான் செய்கிறது. என் பாட்டனைப் போல் நானும் வாழ வேண்டும் என்று! இவர்கள் மட்டும் இல்லையென்றால், பெண் சமூகத்தை நினைத்தாலே அடி வயிறு பதறுகிறது...
அன்பு சில சமயம் என்னுள் ஆர்ப்பரிக்கிறது. சில சமயம் மவுனிக்கிறது. சில சமயம் வலியைத் தருகிறது. சில சமயம் வாழ்த்துகிறது. சில சமயம் மனிதத்தை கற்பிக்கிறது. சில சமயம் ஏங்க வைக்கிறது.
எனை கைம்பெண்ணும் விரும்பாமல், கலைப் பெண்ணும் விரும்பாமல் நான் ஏன் காத்துக்கிடக்கிறேன். எனக்கே தெரியவில்லை. இருந்தும் ஏதோ ஒன்றில் தனித்து நிற்கிறேன், என்னை நானே சராசரி மனிதனாய் சமாதானப்படுத்த முடியாமல்! வாழ்க்கை பல்வேறு எதிர்பார்க்காத திருப்பங்களுடன் என்னை நகர்த்திக்கொண்டே செல்கிறது. வலிதான் வாழ்க்கை என்றால் கண்டிப்பாக வழிபிறக்கும். ஒவ்வொரு வலிக்கு பின்னும் ஒரு இன்பம் நிச்சயம் இருக்கும். இயற்கையின் நியதி இதுதான் எனும்போது கவலை எதற்கு? கடந்து செல்வோம் எல்லாம் நன்மைக்கே !
Comments
Post a Comment