உன் மேல குத்தம் இல்ல... நீ ஒன்னும் நானும் இல்ல!

அம்பிகாவிற்கு 30 வயதிற்கு குறையாமல் இருக்கும். குண்டான உடல். ஒளி பொருந்திய கண்கள். தெய்வீகமான முகம். அவளின் கண்களை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும் பசியே எடுக்காது.  அப்படி ஒரு முகம். ஆனாலும், அவளின் கண்களிள்  ஏதோ ஒரு பரிதவிப்பு, வலி. அதாவது, நீண்ட நாள் பழகிய நண்பனின் துரோகம், உண்மையான அன்பை கொடுத்து ஏமாந்த வலி, நம்பிக்கை துரோகம், இது போன்று எளிதில் கடந்து வர முடியாத ஏதோ ஒரு வலியாகத்தான் இருக்க வேண்டும். அதை ராஜாராமன்  நன்கு அறிந்து கொண்டான். அவளை பார்த்த முதல் நாளே அவனுக்கு பிடித்துவிட்டது. தான் இதுநாள்வரை  எதிர்பார்த்துக் காத்திருந்த பெண் இவள்தானோ என்று தோன்றியது.  ஆனாலும், மத்திம வயதை நெருங்கி கொண்டிருக்கும் அவளுக்கு இதுநாள் வரை காதல் வராமலா இருந்திருக்கும் . கண்டிப்பாக காதல் வந்திருக்கும். இதுபோன்ற ஒரு பேரழகியை  குறைந்தது ஒரு பத்துபேராவது  துரத்தி , துரத்தி காதலித்து இருக்கக் கூடும். ஏன் அவளுக்கு திருமணமாகி குழந்தை இருந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறே அவனின் மனதில் எண்ணங்கள் தோன்றியது. 


ஒரு பெண் மீது காதல் வருவது தவறில்லை. இருப்பினும் அவளோடு வாழ்க்கை முழுவதும் பயணிக்க நினைப்பது இயலாத ஓன்று. காரணம், அவளுக்கு திருமணம் ஆகாமல் இருக்க வேண்டும். அவளும் காதலிக்க தயாராக இருக்க வேண்டும். இது சாத்தியமா ? என அவனின் மனம் கேள்வி கேட்க  அமைதியானான். ஒரு சந்தர்ப்பத்தில் சில நண்பர்கள் அவளிடம் எதார்த்தமாக உரையாடிக்கொண்டு இருக்கும்போது அம்பிகா நீ சிங்கிளா இல்லை கமிட்டேட் டா  என கேள்வி கேட்டனர். அதற்கு  அவள், நான் சிங்கிள்தான். 5 வருடமாக ஒருவரை காதலித்தேன் அது பிரேக்கப் ஆகிவிட்டது. இப்போது நானும் காதலிக்க தயாராகவே இருக்கிறேன் என்று கூறினாள்.  இந்த ஒற்றை வார்த்தை போதாதா ராஜாராமனின் மனமகிழ்ச்சிக்கு!

அதுநாள் வரை வாழ்க்கையில் விரக்தியில் இருந்த ராஜாராமனுக்கு ஒரு  புத்துணர்ச்சி பிறந்தது. சுமார் 3 வருடங்களுக்கு பிறகு தன்னை முதன்முதலாக  கண்ணாடியில் பார்த்து சிரித்துக் கொண்டான். தன் நடை உடை பாவனையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டான். அவளுக்கும் அது பிடித்து விட்டது. ஒருமுறை அம்பிகாவுடன் நண்பர்கள் உரையாடும் போது நீ என்ன மாதிரி பையனை எதிர்பார்க்கிறாய் என, நண்பர்கள் கேட்டது ஞாபகத்திற்கு வந்தது. அப்போது அவள், நான் ஒருவரை பார்க்கும் போது  ஸ்பார்க்  வரவேண்டும். எனக்கு பிடித்து விட்டால் அதற்கான intiative வை நானே தொடங்குவேன் என்று கூறியிருந்தாள்.           

அம்பிகாவின் முகத்திலும் ஒரு புதிய மாற்றம். தன்னை இதுவரை இல்லாத அளவிற்கு அழகுப்படுத்திக் கொண்டாள். அன்று ஹோலிப்பண்டிகை  கருப்பு பேண்ட் , மஞ்சள் நிற டாப்பில் அவள் வந்த போது ராஜாராமன் மயங்கியே விட்டான். ஆர்வக்கோளாறில் அவளிடம் ஒரு செல்பி கிடைக்குமா என்று கேட்டு விட்டான். கேட்டதுதான் தாமதம் உடனே கோபித்துக் கொண்டு மறுத்து விட்டாள். அவனுக்கும் கோபம் அதிகமாக வந்து விட்டது. நான் அப்படி என்ன கேட்டுவிட்டேன் இவள் இப்படி மறுக்கிறாளே என்று. இருப்பினும் சில மணி நேரத்திற்கு பிறகு, ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளிடம் செல்பி கேட்டது தவறுதான் என்பதை புரிந்து கொண்ட அவன், அவளிடம் மன்னிப்பு கேட்டான். அவளும் மன்னித்து விட்டாள். 

ராஜாராமனுக்கு பொதுவாக பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாது. இருப்பினும் அவனின் மனது ஒன்றை மட்டும் அவனிடம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவளை மிஸ் பண்ணி விடக்கூடாது என்று. இரண்டு வாரமாக தூக்கம் இல்லாமல் தவித்த அவனின் மனது. அவன் என்ன சொல்லியும் கேட்டபாடில்லை. இறுதியாக அவளை முதல் நாள்  பார்த்த போது ஏற்பட்ட எண்ணத்தை அவளிடம் கொட்டி விட்டான். (அவனை பொறுத்தவரை நண்பனாக பழகி காதல் சொல்வது எல்லாம் நீண்ட காலம் ஆகக்கூடும்.  அப்படி உருகி, உருகி காதலித்து அவள் மறுத்து விட்டால் அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என்பது அவனுக்கு நன்றாகவே  தெரியும். ஏற்கனவே oneside லவ் அனுபவம் வேறு  உள்ளது.

அவன் உடனடியாக சொல்வதில் இரண்டு சவுகரியங்கள் உள்ளது என நம்பினான் 1. அவள் தற்போது மறுப்பு தெரிவித்தால் கூட   அவளுடன் சேர வேண்டும்  என்ற விதி இருந்தால் கண்டிப்பாக சேருவோம். தன்னை புரிந்து கொள்ள அவளுக்கு மேலும் வாய்ப்பு கிடைக்கும்.  2. அவள் தன்னை விட்டு வேறு ஒருவனை தேர்ந்தெடுத்தால்  கூட அவனை  தன்னோடு compare செய்தே  ஆக வேண்டும். அப்படி தன்னை விட மேன்மையான  ஒருவன் கிடைத்தால் தனக்கும் அதில் சந்தோசமே என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான்)

எந்த பெண்தான் ஏற்றுக்கொள்வாள் ? முன்பின் தெரியாத ஒருவன் தன்னை பிடித்து இருப்பதாக கூறுவதை. அவனுக்கும் தெரியும் தன்னை போன்று எத்தனையோ பேர் இப்படி கூறி இருக்கக் கூடும். அவன் இவ்வாறு கூறினான்.  “உன்னை பார்த்த முதல் நாள்  எனக்குள் ஒரு postive எனர்ஜி. அதை என்னால் விவரிக்க இயலவில்லை. பெண்களை பொறுத்தவரை 2 விதம்தான். ஒன்று இயற்கையிலேயே அழகாக இருக்கக் கூடியவர்கள்.  2, மேக்கப் போட்டால் அழகாக இருக்கக் கூடியவர்கள். இதில் நீ எந்த வகை தெரியுமா என்று கேட்டான். அவள் (உள்ளுக்குள் ஏண்டா  ஏன் உயிரை எடுக்குறீங்க என நினைத்து இருக்க வேண்டும் அப்படிதான் அவனுக்கு தோன்றியது ) சலித்தவாறு எந்த வகைங்க என்று கேட்டாள் . 

நீ இந்த இரண்டு வகையும் கிடையாது. உன் முகம் தெய்வீகமான முகம், லட்சத்தில் ஒருவருக்கு மட்டும்தான் இப்படி இருக்கும். உன்னை முதல் நாள் பார்த்த போது  உன் கண்களில்  யாரோ ஒருவரிடம் அன்பை கொடுத்து ஏமாந்த ஏதோ ஒரு வலி மட்டும் தெரிந்தது. உன் இரு கரங்களை பற்றிக்கொண்டு ஒரு உற்ற தோழனாக நான் இருக்கிறேன் உனக்கு என்ன துக்கமோ, துயரமோ  இல்லை சந்தோஷமோ என்னிடம் பகிர்ந்து கொள் உனக்காக உதவி செய்ய நான் இருக்கிறேன் என்று தனக்கு தோன்றியதை  தட்டு தடுமாறி அவளிடம் கூறி முடித்தான்”. ( உண்மையில் அவன், முதல் நாள் பார்த்தபோது அவளை காதலிக்க வேண்டும். கரம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. அவளுக்கு ஒரு உற்ற நண்பனாக இருக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது ) அவளிடம் இருந்தும் பெரிதாக எந்த ரியாக்சனும் வரவில்லை.

அதற்கு பதிலாக தேங்க்ஸ் என்று கூறி முடித்தாள்.  முன்பு ஒருமுறை இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தும் ராஜாராமன் பயத்தின் காரணமாக அவளிடம் பேசவில்லை. அவளே ஏன் பேசவில்லை என்று கேட்டபோது மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டான். பிறகு இன்ஸ்டாவில் பேசு என நண்பர்கள் வற்புறுத்திய போது முதன் முதலாக பேச முற்பட்டான். நான் இதுவரை பெண்களிடம் பேசியது கிடையாது. நான் ஒன்றை கூற முற்பட்டால் அது வேறு ஒரு விஷயமாக convey ஆகி விடும். சில நேரங்களில் ஏதாவது உளறி விடுவேன். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது. என்று பதிவிட்டு தனது பேச்சை தொடங்கினான். இதற்கு  எல்லாம் ஆமாம் என்று அவளும் சம்மதித்தாள். பிறகு,  அவன் என்ன கேள்வி கேட்டாலும் அவளிடம் இருந்து பதிலே வராது. சில நேரங்களில் 8 மணி நேரம் 10 மணி நேரம் கழித்து பதில் வரும். காதலின் அடிப்படை விதிக்கூட (பொறுமை ) தெரியாத அந்த முட்டாள், பொறுமை காக்க முடியாமல் கேட்க கூடாத கேள்வியை கேட்டு விட்டான். 

அவனை பொறுத்தவரை அவன் மீது  எந்த தவறும் கிடையாது. முன்பின் பெண்களிடம் பேசி இருந்தால் என்ன பேச வேண்டும். என்ன பேசக்கூடாது என்று தெரிந்து இருக்கும். மறுபுறம் காதலின் அவஸ்த்தையாக இருக்க வேண்டும் அப்படிதான் நண்பர்களும் சொன்னார்கள். அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனை பாடாய் படுத்தியது. வேறு வழியில்லாமல் அவளின் முகவரியை கேட்டுவிட்டான். கேட்டதுதான் தாமதம் அவனை பிளாக் செய்து விட்டாள். தன்னை பிளாக் செய்து விட்டாள் என்பதே 3 நாட்கள் கழித்துதான் அவனுக்கே தெரிந்தது.                                                 

கிட்டத்தட்ட 3 வாரங்கள் சரியான தூக்கம் இல்லாமல், அரை பைத்தியமாய் அலைந்து திரிந்தான். நண்பர்கள் அனைவரும் அமைதியாக இரு என்று கூறியும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. காரணம், அவள் அவனை அருவருப்பாக பார்ப்பதாக அவன் உணர்ந்தான். இனிமேலும் தாமதிக்கக் கூடாது என முடிவு செய்து அவளிடம் பேசிவிட முடிவு செய்தான்.      

அன்று திங்கள் கிழமை இரவு 8.20 மணி இருக்கும். அவளுக்கு போன் செய்தான். இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம். (காதலிக்கும் ஆண்களுக்கு மட்டுமே அந்த பயம் தெரியும்) துணிச்சலை வரவழைத்துக்குக்  கொண்டு அவள் நம்பருக்கு போன் செய்தான். ஹலோ என்று குரல் கேட்டது. உன்னிடம் ஒரு 5 நிமிடம் பேசவேண்டும். பேசலாமா என்று கேட்டான். ம்ம் சொல்லுங்க என்று அனுமதி கொடுத்தாள்.  ஒரு டவுட் இத கேட்கலாமா ? வேண்டாமா ? என்று தெரியவில்லை. இருந்தாலும் கேட்கிறேன். என்னை ஏன் பிளாக் செய்த ? நான் கேட்ட கேள்வி தப்பா convey ஆகிவிட்டது என்பது 4 நாளைக்கு முன்புதான் எனக்கே தெரியும். தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சொல்லலாம் என்று இருந்தேன். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மனசு போட்டு அறுத்துக்கொண்டே இருந்தது. அதான் போன் செய்தேன். என்னை போன்று எத்தனையோ ஆண்களை கடந்து வந்திருப்பீர்கள். ஒரு ஆணின் கண்ணைப் பார்த்தாலே அவன் எந்த நோக்கத்தோடு பழகுகிறான் என்பதை சுலபமாக கண்டுபிடித்துவிடுவீர்கள்.  நீங்கள் தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் பேசாமல் இருந்தது மனசு கேட்கவில்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ரொம்ப சென்சிடிவ். எனக்கு பிடித்தவர்கள் என்னை திட்டினால் கூட தாங்கிக்கொள்வேன். பேசாமல் இருப்பதை என்னால் தாங்கமுடியாது. சொல்ல வந்ததை convey செய்து விட்டேன் என்று நினைக்குறேன்.


நீங்கள் ஏதாவது கேட்பது என்றால்  கேளுங்கள் என்று  சொல்லி முடித்தான். சொன்னதுதான் தாமதம். உடனே பொங்கிவிட்டால்..... ”மொதல்ல நீங்க யாரு ? என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும் ? மொதல்ல செல்பி வேணும்னு கேட்டிங்க ? அப்புறம் வீட்டுக்கு வரவான்னு கேட்குறீங்க? ஒரு அந்நியன் இப்படி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. என்னுடைய தற்காப்புக்காக பிளாக் செய்து விட்டேன்” என்று கூறினாள். ராஜாராமன் எவ்வளவு விளக்கம் கொடுத்தும் அவள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நீங்கள் என்ன சொன்னாலும் எதையும் மாற்ற இயலாது. இதை ஒரு தகவலாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறி அமைதியானாள். ராஜாராமனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  (ஏதோ ஒரு 80"ஸ் பெண்ணை போன்ற பேச்சு)  அவளின் பதில் கேட்டு  ஆச்சர்யமடைந்தான்.  

என்னுடைய வாழ்வில் என்றுமே நீங்க ஸ்பெஷல்தான். என்னுடைய வாழ்வில் முதன்முதலாக வந்து பேசிய பெண் அம்பிகாதான். இனி வருங்காலத்தில் எத்தனை பெண்களை சந்திப்பேன் என்று தெரியாது. நான் யாரை சந்தித்தாலும், உங்கள் இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்று அவன் கூறியதும் அமைதியானாள்.

சரி , போய்  நன்றாக தூங்குங்கள். நாளை வரும்போது உங்களுக்கு பேச விருப்பம் இருந்தால் பேசுங்கள். இல்லாவிட்டால் பேசக்கூட வேண்டாம். என்னால் இனி உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என உறுதி அளித்துவிட்டு நன்றி கூறி போனை கட் செய்தான். 

அவனுக்கு இருக்கும் சந்தேகமெல்லம் இதுதான்.... 

1. ராஜாராமன் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பாக தன்னை சீவி சிங்காரித்து அலங்கரித்துக்கொண்டவள். அதன் பிறகு அலங்கரித்து கொள்ளவே இல்லை. ஆனால், கண்ணை மட்டும் அலங்கரித்து கொண்டே இருக்கிறாள்.

2. இந்த உரையாடல் நடப்பதற்கு முன்பாக  அவளின் உடல்நிலை சரியில்லாத போது அவன் whatsapp -ல் விசாரித்தான். ராஜாராமனை தவறாக நினைத்து இருந்தால் எனக்கு இதுபோன்று மெசேஜ் அனுப்பாதீர்கள். பிடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்து இருக்கலாம். ஆனால்,  அவள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. பதிலாக  நன்றி கூறினாள். அவள் எதற்காக  நன்றி தெரிவிக்க வேண்டும்?

ராஜாராமன் போன் செய்தபோது அவள் வீட்டில் பெரும் கூச்சல் சத்தம் கேட்டது. அவள் மொட்டைமாடிக்கு வந்து எதற்க்காக தனியாக பேச வேண்டும். என்னை பற்றி என்ன தெரியும் ? என அவள் அழுத்தமாக கேட்ட  அந்த வார்த்தையில் அவள் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது. அந்த ஒரு வார்த்தை அவனை உலுக்கியேவிட்டது.  பொதுவாக ஒரு பெண்ணின் புறக்கணிப்பை   ஆணால் தாங்கிக்கொள்ளவே  முடியாது. ஆனால்,  இந்த புறக்கணிப்பு வலியையோ, துன்பத்தையோ தரவில்லை. மாறாக அவளை பற்றிய கவலையையும், வருத்தத்தையும் மட்டுமே  கொடுத்தது.  

போன் செய்வதற்கு முன்பாக அவளின் கண்களை ராஜாராமன் பல மணி நேரம் பார்த்து ரசித்து இருக்கிறான்.  அந்த கண்கள் சற்றும் திரும்பிக்கூட அவனை பார்க்கவில்லை. மாறாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவும் இல்லை. ஒரு வேளை பிடிக்கவில்லை என சிறிது எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் கூட அவன் பார்த்து இருக்க போவதில்லை.  அது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. எப்படி கோபப்படவேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கும் அவளை நினைத்து வருத்தப்படுவதா? இல்லை தன்னை நினைத்து கோபப்படுவதா?  என ராஜாராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவளை மணந்து கொள்ள ராஜாராமனை விட ஆஸ்தியிலும், அந்தஸ்திலும் செல்வாக்கு மிக்க பெரிய நபர்கள் வரக்கூடும். ஆனால், அவளின் குழந்தைத்தனமான கோபத்தை புரிந்து கொள்ள ராஜாராமனால் மட்டும் முடியும் என அவன் நம்புகிறான். (இதற்கிடையில் தன்னை மட்டுமே தான் காதலிப்பதாக கூறுகிறாள்.)     

அப்படி என்ன? அவளை பற்றி பெரிதாக தெரிந்து கொள்ள வேண்டும். அவள், யாரோ ஒருவரால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம். திருமணமாகி பிரிந்து இருக்கலாம். அனாதை ஆசிரமத்தில் ஒரு குழந்தையை  தத்து எடுத்து வளர்த்து வரலாம். இல்லை, தனக்கே ஒரு குழந்தை இருக்கலாம்.  காதலனால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் . சமூகத்தால் சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கலாம்.  இதில் ஏதோ ஒரு வலியைதான் அவள் அனுபவித்து இருக்க வேண்டும். அவளின் வலி பெரிதுதான். அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அவளோடு பயணிக்க தயாரான பின்பு, இதெல்லாம் ராஜாராமனுக்கு ஒரு தடையாக வரும் என்று அவன் நினைக்கவே இல்லை. 


முடிவு காலத்தின் கையில்......

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி