Posts

Showing posts from 2022

கனவுகள் மெய்ப்பட வேண்டும்

Image
  கார்மேக அருவியில் குளிப்பது ,  கள்ளுண்ட மயக்கத்தில் கிடப்பது , காதல் போதையில் திரிவது , அவளும், நானும் உரையாடுவது கம்பனை மிஞ்சும் அளவு பாடுவது ! கண்ணதாசனிடம் உரையாடுவது !  ச ங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது ! அமுதசுரபி என் கையில் கிடைப்பது !  ம ன்னாதி மன்னனாய் மணி முடி   ஏற்பது ! அந்நியநாட்டு   பெண்ணை மணப்பது ! அள்ள அள்ள குறையாத தமிழ் என்னோடு கொஞ்சி விளையாடுவது! மாபெரும் சமூக புரட்சியாளனாய் வலம் வருவது ! இசை அரசன் இலங்கேஸ்வரனாய்   பாடுவது ! பறவையாய் பறப்பது ... பரமனை தரிசிப்பது ! உள்ளம் கரைந்து ஊன் உருகி சிவ பாதம் சேர்வது .... ஆஹா.. ஆஹா… கனவுகள் தான் எத்தனை சுகம் ! காண முடியாத காட்சி எல்லாம் கண் முன்னே கொண்டு வருகிறது ... இன்று பலரும் வாழ்க்கை நடத்துவது கனவுகளால் தான் ... கனவுகள் மெய்ப்பட வேண்டும் ...  

காதல் மட்டும் காதல் செய்பவனை(ளை) வெறுப்பதே இல்லை!

Image
  காதலி காதலை வெறுத்தாலும், காதலனை வெறுத்தாலும், காதல் மட்டும் காதல் செய்பவனை(ளை) வெறுப்பதே இல்லை! அன்பும், காதலும் கணவன் மனைவியோ? ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தாலும், நேசம் மட்டும் குறைவதே இல்லை… முன்பின் தெரியாத முகம், அன்பிற்காக, யாரோ… யாருக்காகவோ… ஒரு துளி கண்ணீர் சிந்தும் போது பேரன்பு ஊற்றெடுக்கிறது… இதுதான் மானுடத்தின் சிறப்போ! அதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது… அன்போ, காதலோ அள்ளி, அள்ளி கொடுங்கள்…. அதை கொடுப்பதற்கு மட்டுமே நமக்கு உரிமை உண்டு.... ஆனால், ஒரு போதும் அதை மற்றவரிடம் இருந்து எதிர்பார்க்காதீர்கள்…. அன்பு எதிர்பார்க்கும் சிலரை பித்தனாக்கிவிடும்… காதல் எதிர்பார்க்கும் சிலரை   பைத்தியக்காரன் ஆக்கிவிடும். அன்பு அதிகமாகும் போது சிவம் பிறக்கும்! காதல் அதிகமாகும் போது கவி பிறக்கும்! ஆயினும், கவி வடிவில் சிவம் சிரித்து நிற்கும். ஏனெனில், அன்பும், காதலும் சிவம் சக்தி போல் ஒன்றோடு ஒன்று கலந்தது.... காதலியுங்கள்.... காதல் உங்களை காதலிக்கும் வரை.....                          

கொஞ்சம் நேரம் கொடு! உன்னையும் காதலிக்க கற்றுக்கொள்கிறேன்!

Image
  இளமையின் கனவுகள் நொறுக்கப்பட்ட பின்னரும் இலக்கு தெரியாமல் பயணிக்கிறேன்… அம்மை அப்பனோடு மட்டுமே இனி வாழ்க்கை பய ணம் போதும் என மனம் விரும்புகிறது… அம்மை அப்பனோ அருகில் வரமுடியாத வெகுதூரத்தில் என் செய்வேன்? காட்டு வெளியா? கடற்கரையா? காலம் தான் இனி முடிவு செய்யுமென காத்திருக்கிறேன்… நகைச்சுவை சொல்ல நண்பன் இல்லை… நா ருசிக்கு நளபாகம் இல்லை… நறுமணம் கமழும் மலர்கள் இல்லை… நதியே,ரதியே, கதியே என நான் உளர எனக்கென ஒரு தேன்மொழி இல்லை….  உணர்வுகளை கடத்தும் சில திரைப்படங்களோடு பயணிக்கும் போது மட்டுமே மனம் லயிக்கிறது! அன்னைமடி சுகத்தின் ஆனந்தம் தருகிறது!   பிழைப்புக்கு பஞ்சமில்லை… தூரத்து வெளிச்சம் மட்டும் கண்ணுக்கு தெரிகிறது… ஆயினும், வெறுமை மட்டும் என்னை விரும்பி கொண்டே இருக்கிறது…  நான் அதை விரும்பாத போதிலும்! பரவாயில்லை, உனக்காவது என்னை பிடித்திருக்கிறதே! கொஞ்சம் நேரம் கொடு! உன்னையும் காதலிக்க கற்றுக்கொள்கிறேன்! பிறப்பறுத்து விட்டான் பிறைசூடன்… மோட்சத்திற்காக காத்திருக்கிறேன்,   பட்டினத்தாரை போல எனக்கும் நுனிகரும்பு இனிக்கும் நாள் எந்நாளோ?  

உன் மனிதம் கேள்விக்குறியாகும்?

Image
  சேமிப்புகள் கரையும் போதும், சிக்கனம் சிரிக்கும் போதும், உறவுகள் உதாசீனப்படுத்தும் போதும், உனக்கினி யாருமில்லை என உணரும்போதும், வறுமை குடிக்கொள்ளும் போதும், மனதை வெறுமை ஆக்கிரமிக்கும்… வாழ்க்கை கேள்விக்குறியாகும்! மரணம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும், துணிவு வாள் தூக்கி நிற்கும், உன் மனிதம் கேள்விக்குறியாகும்? உன்னையே அது தோலுரித்துக் காட்டும்! சித்தநாதன் அருவமாய் பார்ப்பான்… வேறு வழியில்லை! சரணடைந்து விடு சங்கரனை இனி சகலமும் அவன் தான் என்று… அம்மையப்பனாய் அவனே வருவான் அருள்மழையும் பொழிவான்! இதயம் இனித்திடும் இன்பமும் தருவான்… ஓம் நமசிவாய!  

என் சுவாசக் காற்றே

Image
  நீரூற்றின் தேனூற்று….. கவி எழுத தெரியாது, கவியமுது படைக்கிறேன்! கலை அது தெரியாது, கலை நயம் ரசிக்கிறேன்! நிலா, ஒளி, தங்கம், சுடிதார், சன்கிளாஸ் அனைத்திலும் அவள் முகம்! திருமணம் நிகழாதென தெரிந்தும் காதல் வரம் கேட்டாள்… கொடுத்துவிட்டேன் என் திருமன(த்)தை! உச்சிதனை முகர்ந்தால் உன் சுவாசம்! செடிகளை நேசிக்கிறேன்! பூக்களோடு சிரிக்கிறேன்! மரங்களை கட்டிப்பிடிக்கிறேன்! உன் சுவாசக்காற்றில் உயிர்வாழும் இவையெல்லாம் எத்துணை பேறு பெற்றவை! இவை மட்டுமா?... நானும் தான்.... என் சுவாசக் காற்றே! என் சுவாசக் காற்றே! உன் நினைவுகள் என் சுவாசமானது…..  

உன் புன்னகை போதுமடி!

Image
  நறுமணம் கமழும் நந்தவனம், பன்னீர் இதழ் நனைத்த பரியவள்; தேன்குழல் வெண்ணிலா… அதியமானின் நெல்லிக்கனியாய் அவள்முகம் என்வசம், என் மனமோ அவள் வசம்… இனி என்ன?... சுயம்வரம்! இரவெல்லாம் சப்தஸ்வரம்… அவ்வையின் அருள்வாக்கு ஊக்கமது கைவிடேல்! என் ஊக்கமும் நீதான்! ஆக்கமும் (மதுவும்) நீதான்! அருள் ஒளி வீசும் அற்புதமே… என் ஒவ்வொரு அத்தியாயத்திலும்   அதிமதுரம் வீசுகிறாய்… என் தவம் செய்தாய்!  நான்  நின்னை  சரணடைந்தேன்!

’இரவின் நிழல்’ சில மனிதர்களின் நிழல்களை வெளிச்சம் போட்டு காட்டும்

Image
 பாபம் செய்யாதிரு மனமே! யமன் கோபம் செய்தே நாளை கொண்டோடிப்போவான். - கடுவெளி சித்தர். ‘ஒத்தசெருப்பு’ படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பெருமை பார்த்திபனை சாரும். ஆம், இயக்குநர் & நடிகர் பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘இரவின் நிழல்’ சிங்கில் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. படம் எடுக்க அவர் மற்றும் அவரது குழுவினர் பட்ட சிரமங்களை எல்லாம் முதல் அரை மணிநேர கதை கூறுகிறது. சாதிக்கும் எண்ணம் இருந்தால் போதும் இயற்கையை துணை நின்று உதவிசெய்யும் என்பதற்கு இப்படமே ஒரு ஆதாரம். மசாலா திரைப்படங்களை மட்டுமே எடுத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணும் இயக்குநர்கள் மத்தியில் ரசிகர்களை நம்பி எந்த ஒரு புதுமுயற்சியாக இருந்தாலும் அதை வரவேற்பார்கள் என்ற அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை (குறிப்பாக தமிழ் ரசிகர்கள்). வறுமை & பசியின் பிடியில் சிக்கி தவிக்கும் யாரும் இல்லாத ஆதரவற்ற சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். அதன்பிறகு அவன் வாழ்க்கையில் நடைபெறும் சம்பங்களே இப்படத்தின் கதை. இன்னும் தெளிவாக சொல்ல வ

இனி தினமும் அந்தாதிதான்

Image
 உன்னோடு பயணித்த ஒவ்வொரு மணித்துளியும் மரித்தாலும் மறவாது கண்மணியே!  நித்திரையிலும் நினைத்ததில்லை நின் நினைவு தினம் தினம் வாட்டுமென்று! ஆசைத்தீ என்றால் ஆறு மண்டலத்துக்குள்  அணைந்து இருக்கக்கூடும்..! இலட்சியத்தீ.... மறையாது, மறைக்காது, மரணிக்காது!  என் எச்சத்தின் மிச்சம் இருக்கும் வரை எரிந்து கொண்டே இருக்கும் நரக வேதனைதான்... ஆயினும் பரமசுகம்! கரைகிறேன், உறைகிறேன், பனிக்காடாய் பற்றி எரிகிறேன்...   மானங்கெட்ட மனசு மத்தளம் கொட்டுகிறது! மகுடி ஊதிய பாம்பாய் தறிகெட்டு ஆடுகிறது!  மனமது வசப்பட்டாள் மகான் ஆகிவிடுவேன்! மனமோ! மாதேவி வசம்...   வேறு வழியில்லை சரணாகதி அடைந்து விட்டேன்...  இனி தினமும் அந்தாதி தான்...! 

கல்யாண அகதிகள்

Image
காணும் முகமெல்லாம் கல்யாண அகதிகள்.... கருவறையில் காதல் கனி ரசம். தெவிட்டாத தேன் அமுதாய் தித்திக்கும் காதல் கவிதைகள்...  பருக ஆளில்லை...  பழரசம் இனி இல்லை....  ஆண், பெண் பேதமின்றி சமரசம் உலாவும் இடம் இதுதான்...இங்கு போட்டி இல்லை! பொறாமை இல்லை! வஞ்சகம் இல்லை..! வாழ்த்தும் மனம் மட்டுமே. .. இருமனம்! திருமணம்! மனமெங்கும் மகிழ்ச்சியே! கண்ணோடு கண் பேசும் கரம் நீட்டா...விழி துடைக்கும்! மாதரின் மனக்குமுறல் மன்றாடிக் கிடக்கிறது. இதுவும்  அழகுதான்,  கடலுக்கு அடியில் நிலநடுக்கம்!  சுனாமி வராதவரை!  அணுகுண்டின் கதிர்வீச்சுகள் போதும். இன்னொரு சுனாமி வர வேண்டாம்.... வாழட்டும் இன்முகத்தோடு இவ்வையகமே.. சாத்திர சடங்கில்லை...  சம்பிரதாயம் இனி இல்லை... சகலமும் நான்தான்!  காற்று, நிலம், நீர், ஆகாயம், நெருப்பு என ஐம்பூதமாய் ஆர்பரிக்கின்றேன்...  கண்ணாளனை சேரும் நாள் எந்நாளோ?

சொப்பனத்திலும் சுகமில்லை...

Image
 கனவுகள் கவிதை பெற கவிதை உயிர்பெற உயிருக்குள் உன்னதமாய் அமர்வாய்.... சிரிப்புகள் நகைப்பூட்டும், சிந்தனை கிளர்ச்சியூட்டும்! என் மனம் தாலாட்டும்! எள்ளியே நகையாடும்!  கிறுக்கனுக்கு கிறுக்கனாய்... கவிதைக்கோர் அரக்கனாய், கம்பனையும் கவிராட்சசனையும் கவிதை போர்தொடுக்க அழைப்பேன்.  எனை குழந்தையாக பாவித்து என்னுடன் விளையாடவே வருவர்.   இன்றோ, சொப்பனத்திலும் சுகமில்லை...சுகந்தமும் வரவில்லை... சேற்றில் சிக்கிய சப்பரமாய் ஊர் கூடி இழுத்தாலும் சற்றும் நகர்வதில்லை விடிந்து விடுகிறது காலைப்பொழுது.... 

கோடான கோடி முத்தங்கள்

Image
 தமிழ் அது மொழியல்ல உயிர்... ஒட்டுமொத்த உணர்வுகளின் கோபம் அது! தமிழினத்தின் தலைச்சிறந்த பொக்கிஷம் அது!  தரணியில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தகப்பனாய் வீற்றிருக்கும் தலைமை பீடம் அது! வடமயமாக்கல் (சமஸ்கிருதம், பார்ப்பனியம்) மதம் தரித்து வந்தாலும்,  மனிதம் தவிர்த்து வந்தாலும்,  இந்தி எனும் முகமூடி அணிந்து வந்தாலும் எள்ளி நகையாடி கொண்டே இருக்கும்... அன்பே சிவம்- என் அய்யன் திருமூலர் வாழ்ந்த புண்ணிய பூமி இது! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையாய் என் அகத்துக்குள் இனிக்கிறான்... அள்ளியே கொடுக்கிறான் - வள்ளலாரின் அருள் நிறைந்த மண் இது... நட்டக்கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே, மொனமொனவென சொல்லும் மந்திரம் ஏதடா! நட்டக்கல்லும் பேசுமோ நாதனும் உள் இருக்கையிலே... சுட்ட சட்டி  சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!- சித்தர் சிவவாக்கியரின் சித்தம் தெளிந்த பூமி இது... வடமயமாக்கல் எதிர்ப்பு என்பது  எம் தமிழினத்தின்  பாரம்பரிய சொத்து...  எம் தலைமுறை மட்டும் விட்டுவிடுமா என்ன? இங்கு மனிதம் ஒரு போதும் அழியாது. அமுதே! தமிழே! அன்னைமடியே உன்னை ஆராதிக்கிறேன்... உனை எவர் சீண்ட வரினும், அடித்து நொறுக்குவேன் என் எழுத்து

நவநாகரீகம் பசப்பும் பசப்பிகள்

Image
 நவநாகரீகம் எனும் பெயரில் அழகான உணர்வுகளை கொன்று கொண்டே இருக்கிறார்கள்... தன்னை உணர்வுகளுக்கு அடிமையாகாத அப்பாற்பட்ட மனிதர்களாக சித்தரிக்கிறார்கள்! இறுதியில் தன்னை மனிதமிருகமாய் மாற்றி தன் சுயநலம் மட்டுமே பெரிதென வாழ்கிறார்கள்! இந்த நவநாகரீக கோமாளிகள்! இவர்கள் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள்... அன்பை அழித்து, அரவணைப்பை மிதித்து, ஆதரவினை கொன்று, பற்றற்றவர்களாக பசப்பும் இவர்கள் வாழ்வதை விட சாவதே மேல்!

பரிவட்டம் சூடுகிறான் எங்கள் இளவரசன்

Image
 பட்டொளி பளபளக்க ... பவனி எங்கும் பூச்சொறிய, எங்கள் பட்டத்து இளவரசன் ( ஜெயராஜா) குறுநகையுடன் பரிவட்டம் சூடுகிறான்...! இவன் அரியணையை அலங்கரிக்க, அன்பினில் தான் திளைக்க, மகுடத்திற்கு மணி மகுடமாய், மகாராணி வர்ஷா(மழை மகளாய்) கரம் கோர்க்கிறாள்...! சுற்றம் புடை சூழ, சுகந்தம் மனம் கமழ, சுவை நாவினில் இனிக்க!  இன்பம் பொங்கும் இந்நாளை போன்று எந்நாளும்  அகம் மகிழ்ந்து அன்புடன் வாழ நட்புடன் வாழ்த்துகிறேன். வள்ளுவனின் முப்பாலாய், முக்கனியின் தீம்சுவையாய்,   முத்தமிழின் தேன் கனியாய்,  காதல் போதையில் கற்கண்டாய் களிப்புற்று வாழ்க... இறைவன் ஆசிகளுடன், வாழ்க  வளமுடன்!

கிறுக்குவதற்கு நிச்சயம் வரிகள் வரும்.

Image
 தேட ஆள் இல்லாத போது  தொலைந்து போவதில்லை அர்த்தமில்லை தான்! தொலைந்து போனாலாவது யாரேனும்  தேட வரமாட்டார்களா?  என்ற ஆசையில் தான் பலரும்  தொலைந்து போகிறார்கள்... தங்களை தொலைத்து போகிறார்கள்! தேடுவதற்கு ஆள் வருமோ? இல்லையோ?தெரியாது.  கிறுக்குவதற்கு நிச்சயம் வரிகள் வரும். அந்த வரிகளின் உயிர்ப்பில் உயிர்த்தெழுவீர்கள்! எனவே தொலைந்து போக ஆசை எனில்  மகிழ்ச்சியாக தொலைந்து போங்கள்!

உறுபெறுதல் சாத்தியமா?

Image
இப்போதெல்லாம் மனம் அலங்கரித்து கொள்ள விரும்புவதேயில்லை...  அலங்கரிப்பது எதற்கு?  வசீகரிக்கத்தானே.....  வசீகரம் எதற்கு?  ஈர்க்கத்தானே....  ஈர்க்கப்பட்ட வெல்லம் உருகி,  கரைந்து வழிந்தோடிய பின்  உறுபெறுதல் சாத்தியமா?  நின் இன்முகம் காணாமல்...! 

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Image
 

நான் யார்?

Image
 உள்ளூர ஒலிக்கும் ஊமை உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க துடிக்கின்றேன்...  அண்டம் முதல் பிண்டம் வரை அத்தனை அழகையும் அணு அணுவாய் ரசித்து அச்சில் கோர்க்க ரசிக்கின்றேன்..  கண்ணதாசன், வைரமுத்து வரிகளுக்கு மாற்றாக வட்டெழுத்து சுட்டுவிட சுட்டெழுத்து தேடுகின்றேன்..  தமிழ் மீது காதல் கொண்டு காட்டுமிராண்டியாய் கேட்பாரற்று கிறுக்குகிறேன்...  இசையில் ஆரோகனம் தெரியும் அவுரோகனம் தெரியும் ஆழ்ந்து ஊன்ற தெரியாது...  தொலைக்கிறேன்.. தொலைந்து போகிறேன்... சட்டென பறந்து போகிறேன்....  சமூக அக்கறையாளனா? தெரியாது. சற்று சகிப்புத்தன்மை உண்டு.  முற்றிலும் மறக்காது, மறைக்காது முழுவதும் உளறிவிட நான் என்ன பைத்தியக்காரனா?  காதல் அறியாதவர்கள், கனிமொழி சுவைக்காதவர்கள்... தாக்கம் இல்லாதவர்கள், தனிச்சொல் அறியாதவர்கள்...  எனை பெண் பித்தன் என்றோ, பெரும்பாவி என்றோ வசைப்பாடக் கூடும்...  வசையிலும் அசை சேர்க்கும் தமிழ் ஓசை ரசிகன் நான்! இருப்பினும் நான் யார்?  எனை பற்றி அறிய என்னை நானே தேடுகிறேன்...  உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்....! 

சிவகாமிக்கு என் அர்ச்சனை

Image
 சிவனை எதிர்பார்த்து காத்திருக்கும் சிவகாமியே...  உன் சிவன் நானோ என்று உள்ளுக்குள் ஒரே நர்த்தனம்!  காலங்கள் ஓடினாலும், கண்மணி அவளின் கண்பார்வை மட்டும் கலையவே இல்லை...  முகத்தில் மலர்ச்சி... மற்றற்ற மகிழ்ச்சி!  வடக்கத்திகள் வாய்பிளக்கும் கவிபாடும் லோலாக்கு....  கவியின் சிறு அசைவில் சில்லுசில்லாய் சிதறுகிறேன்..!  காலங்கள் பதில் சொல்லும், காத்திரு கண்மணியே...  கற்பனையில் அர்ச்சிக்கிறேன்! அர்ச்சனையை ஏற்றுக்கொள்....  பேரன்போடு பெருந்துணை கிடைத்து, பெரும் புகழோடு பாரினில் வாழ்ந்திட என் அகம் இனித்த நல்வாழ்த்துக்கள்....  பெருந்துணை நான் என்றால் பேரின்பம் வேறு உண்டோ?