Posts

Showing posts from 2021

கண்ணீரில் உனை தேடுகிறேன்

Image
 கண்ணீரில் உனை தேடுகிறேன். கானல் நீராய் தோன்றுகின்றாய் கவிதையாய் உனை தேடுகின்றேன், காளமேக புலவராய் கானுகின்றாய், பன்னீரில் உனை தேடுகின்றேன். பாரிஜாதமாய் மனம் வீசுகின்றாய் உன் மன பல்லக்கில் எனை தேடுகின்றேன்..! எனை பள்ளத்தில் தள்ளுகின்றாய்! அடங்க மறுக்கும் மனம் போல என் நினைவை, நீ அழிக்க துணிந்தாலும் நான் அத்துமீறிக்கொண்டே இருப்பேன்! 

திருத்துறைப்பூண்டியில் திருவையாறு

Image
 திருவாரூர் மாவட்டம்  திருத்துறைப்பூண்டியில்  நேற்று(16.12.2021, மார்கழி 1) திருத்துறைப்பூண்டியில் திருவையாறு நிகழ்ச்சி முதன்முதலாக நடைப்பெற்றது. 50 தவில் வித்வான்கள், 50 நாதஸ்வர வித்வான்கள் இணைந்து மங்கள இசை முழங்க மனதை குளிரவைக்கும் விதமாக போட்டிப்போட்டு இசைமழை பொழிந்தனர். திருத்துறைப்பூண்டியில் உள்ள ஏபிசி ஜூவல்லர்ஸ், உழவாரப்பணி குழு போன்ற ஆன்மிக அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.  திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர்  அய்யா நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசைப்பற்றிய விளக்கத்தை பாமர மக்களுக்கு எளிதில் புரியும்படி விளக்கினார்.  யோகா, தியானம் போன்று இசை எவ்வாறு உள்ளுருப்புகளை ஆரோக்கியத்தோடு இயங்க செய்கிறது என்றும் எந்த பண்ணை எவ்வாறு பாட வேண்டும் என்றும் மிக அருமையாக விளக்கினார். 80-90 களின் காலக்கட்டத்தில் வெளிவந்த சலங்கை ஒலி, சிந்து பைரவி, மோகமுள் போன்ற குறிப்பிட தகுந்த படங்களுக்கு பின் தமிழில் இசையை மையப்படுத்தி படங்கள் வெளிவரவில்லை என்றே கூறலாம். மனதை மகிழ்விக்கும் அன்னையின் தாலாட்டாக இசை இருந்துவருவதை யாராலும் மறுக்க இயலாது. அந்த வக

வைகுந்தனுக்கு ஏகாதசி

Image
 பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்யதேசங்களில் ஒன்று என்றும் பெருமையோடு அழைக்கப்படுகின்ற திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது   அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணன் கூறுகிறார். மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில்... கார்மேனிச் செங்கண் கதிர்மதிப்போல்முகத்தான் நாராயணனே.. என்று திருப்பாவை பாடலின் முதல் பாடலாக ஆண்டாள் மார்கழி மாதத்தின் சிறப்பை வருணித்து கூறுகிறார். தட்சிணாயின காலத்தின் கடைசி மாதம் மார்கழி மாதம் ஆகும்.( தட்சிணாயின காலத்தில் சூரியனின் கதிர்வீச்சு  பகலில் குறைவாகவும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்) தட்சிணாயின காலம் என்பது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் ஆகும். உத்தராயிண காலம் என்பது  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் ஆகும். மார்கழியில் விரதம் இருந்து இறைவனை மனதார வழிபட சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது வெகுஜன மக்களின் நம்பிக்கை. இதன்பொருட்டு மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுவார

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Image
 அந்த ஒரு வார்த்தையில் உள்ளம் இனிக்கத்தான் செய்கிறது..! கொவ்வை கனி இதழ் அசைவின் அழகு, பால்கோவாய் இனிப்பாய் அவளின் சிரிப்பு கத்தி விழி வீசும்! கற்பூரம் மணக்கும்..! நெற்றி சுருக்கத்தில்  சறுக்கித்தான் வீழ்கிறது மனம்! வாய் மட்டுமல்ல, கண்களும் சிரிக்கும்! காந்தப் பார்வையில் கவி எழுத துடிக்கும், மனம் கற்பனையில் மிதக்கும்! வர்ணனை  பிதற்றலில் இது ஒன்றே பொருந்தும்  ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’

வந்து எனை ஆட்கொண்டு விடு

Image
 ஆனந்தமே, அற்புதமே, அருட்பெருங்கடலே!அன்னை மடியே,  அப்பன் திருவடி நிழலே! நின்னை சரணடைந்தேன்!  வந்து எனை ஆட்கொண்டு விடு.. காதல் சுவையே.. கட்டுக்கரும்பே! காலம் கடந்த கட்டழகே! கம்பனை மிஞ்சும் கவித்துவம் எனக்கில்லை, எனினும் கம்பரசத்தை மிஞ்சும் அன்புரசம் நான் தருவேன்.. வந்துவிடு, வந்து எனை ஆட்கொண்டு விடு! எண்ணியதெல்லாம் எனக்கு அளித்தாய்! என்னுள்ளம் குளிர வைத்தாய்! இன்பத்தை மட்டும் ஏனோ ஏட்டினில் வைத்தாய்! இடையினில் ஏன் எனை மறந்தாயோ! வந்துவிடு, வந்து எனை ஆட்கொண்டு விடு! பற்றை எல்லாம் பற்றறுக்கும், பட்டொளி வீசிநிற்கும் பார்புகழும் பார்வதி தேவனே.. பயம் எனும் பற்றினை பற்றாது அறுத்துவிட பட்டென ஓடிவந்து விடு பசலையாய் எனை ஆட்கொண்டு விடு! சப்த, நிசப்தமின்றி பரவெளியாய் அலைகிறது மனது, அதை மஞ்சள் நீரில் குளிப்பாட்டி  குங்கும பொட்டு வைக்க குருநாதனே ஓடி வந்துவிடு,.. வந்து எனை ஆட்கொண்டு விடு! முள்ளில் தைத்த இதயமாய் என்னுள்ளம் துடிக்கின்றது! ரணத்தை ஆற்றிடவே, ராகதேவனே! எனை நீ மீட்டிடவே.. வந்து விடு,..  வந்து எனை ஆட்கொண்டு விடு!

அழுகை எனும் போதை

Image
 காதல் விசித்திரமானதுதான்..! கடல் கடந்தாலும், காடு மலை திரிந்தாலும், காலம் கடந்தாலும், காதல் கடுகளவும் குறைவதேயில்லை ஆண்மகனுக்கு..!அவனை அழ வைத்து போதை காண்பது பெண்ணுக்கே உரிய அலாதி இன்பம்.தன்னை விரும்பிய ஒரு ஜீவனை அழ வைத்து ஆனந்தம் காண்கிறாள்... அந்த அழுகை தனக்கான வரப்பிரசாதம் என்று நினைக்கிறாள்..அவனும் அழுகிறான், அழுகிறான், அழுது கொண்டே இருக்கிறான்...! ஆண் மகனது கண்ணீர், பெண் அருந்தும் தேவபானமாக வடிந்து கொண்டே இருக்கிறது. பெண் தொடர்ந்து அருந்திக்கொண்டே இருக்கிறாள்..! பொழுது புலரும் இனிய காலை வேளை, கீச்சிடும் சத்தத்துடன் எலிகள் அங்கும், இங்கும் ஓடி உணவை தேடி அலைகின்றன.வெண் தாமரை குளத்தில் கருவிழி அமைந்தது போன்ற கண்களை உடைய  ஒரு குட்டி தேவதை மாஸ்க்கை அணிந்தவாறு அங்கும், இங்கும் நோட்டமிட அழகாய் கண் சிமிட்டுகிறாள்! சாய், சாய் என்ற ஒலி சத்தம், கண்ணை பறிக்கும் வெளிச்சத்தில் பளீச், பளீச் என்று மின்னும் டிஜிட்டல் போர்டுகள், லேசான சங்கு சத்தத்துடன் நகரும் ரயில் வண்டிகள்.. ஆம்..!  இது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.   அதிகாலை பொழுது, முட்டிகள் இரண்டும் முத்தமிடும் தருணம்,... தலைவன், தலைவியோடு அ

அக்காவிற்கு அவள் தான் அணியிலக்கணம்

Image
பனி படர்ந்த விடியற்காலை, குளிரில் மயிர்கால்களும் கூச்செறியும்! அரை தூக்கத்தில் முக்காடு போர்வையுடன் கையில் கலர் பொடிகள்.. உடல் நடுங்குகிறது(என்ன தம்பி முழிச்சிட்டியா?- ஒரு குரல்) பகலவன் துயில் எழும் முன்னே…வண்ண, வண்ண மாக்கோலங்கள்! மயிலாய், தாமரையாய், வண்டாய், மலர் பூச்செண்டாய்… கோயில் மணி ஓசை, இனித்திடும் சமயம் சுவை இருக்கிறதோ, இல்லையோ அந்த சுண்டலுக்கும், பொங்கலுக்கும்! இன்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  தொடர்கிறது அந்த ஆனந்தம், கையேந்துவதை விடுவதேயில்லை… பிராணனை பிடிக்க எழுந்திரு என்று பிராணனை எடுத்தார்கள், பிராணனை எடுத்தாலும் பிராணனை பிடித்திருந்தோம்! இன்றோ இரவிலே 11 மணிக்கெல்லாம் வீட்டுவாசலை அலங்கரிக்கின்றன மாக்கோலங்கள்.. சந்திரன் முறைக்கிறான்! பிராணனை மட்டும் பிடிப்பதேயில்லை… மருத்துவமனையிலும், மாத்திரையிலும் பொழுது கழிகிறது!   அக்கரை மருதாணி வெற்றிலாய் சிவக்கும் என்பார்கள், அடித்து பிடித்து ஓடி போய் பறித்ததும் உண்டு அதில் தான் எத்தனை புறக்கணிப்புகள்… மனம் சிவக்கும் மருதாணி கைகளை இன்று பார்க்க முடிவதேயில்லை… அது பெண் அடிமையாம், அதனால் ஒதுக

பன்னீரில் நனைந்த ரோஜா

Image
எலுமிச்சை நிறமவள், ஏகாந்த சுகந்தம் அவள்! கிளி பேசும் கண்ணுக்கு மை இடுவதே இல்லை! இருந்தும் மனம் கொத்தும் பறவை அவள்! அவ்வப்போது புன்னகை பூப்பாள், சிறிது புருவம் உயர்த்துவாள் பன்னீரில் நனைந்த ரோஜாவை போல அவளின் வியர்வை துளிகள்.. கைக்கு எட்டும் தூரத்தில் டிஷ்யூ பேப்பராய் நான்! அலையாத்தி காட்டுக்குள்ளே(அவள் கூந்தலில்)  திக்குதிசை தெரியாமல் சிக்கி தவிக்கிறேன்... அவள் வழிகாட்டாது, ஓரப்பார்வையில் உயிர்பிச்சை இடுகிறாள்.. உள்ளூர வடிகிறேன் நானும் சப்பாத்திக்கள்ளியாய்..! 

எப்படி படிப்பேன் ? நானும் அவளை!

Image
 எழுத்து வசப்பட வேண்டும்  எனில் நிறைய புத்தகம்  படிக்க வேண்டுமாம்!  ஆதியும் அந்தமும் இல்லாமல்  சந்தம் மட்டும் வைத்துக் கொண்டு எப்படி படிப்பேன்  நானும் அவளை! 

அபூர்வ தம்பதிகள்

Image
காதல் யாருக்கு எப்போது பூக்கும் என்று தெரியாது! அதுபோல தான் திருமணமும் யாருக்கு யாருடன் நடைபெறும் என்று அறுதியிட்டு கூற முடியாது! ஆனால் மனம் கொண்டவரை திருமணம் செய்யும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. கேரளாவின் போர்ட் கொச்சினில் அமைந்துள்ள ஆர்ட் கபேயில், அந்த கபே உரிமையாளரின் மகனான ஆனந்த் ஸ்கரியா என்பவர் மார்கஸின் நூற்றாண்டு கால தனிமை எனும் புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறார். (ஆனந்த் ஒரு இடது சாரி சிந்தனையாளர், கேரளாவின் மகாராஜா கல்லூரியில் எஸ்எப்ஐ-ல் தலைவராக இருந்தவர்) அப்போது ஸ்பெயினில் இருந்தும் லண்டனில் இருந்தும் ஒரு 25 பெண்கள் ஒரு வார சுற்றுலாவாக கேரளாவிற்கு வந்தார்கள்.  அவர்கள் அந்த ஆர்ட் கபேயில் உணவு அருந்துவதை பார்த்துக்கொண்டே அந்த புத்தகத்தை  ஆனந்த் வாசித்து கொண்டு இருக்கிறார். அப்போது காயத்ரி கேமிஸ் என்ற பெண் ஒருத்தி ஆனந்திடம் சென்று உனக்கு மார்க்ஸ் என்றால் பிடிக்குமா என்று கேட்கிறாள். அவனும் பிடிக்கும் என்கிறான். இப்படியாக அவர்களுக்குள்ளான உரையாடல் தொடங்குகிறது. ஒரு வார காலத்தில் அவர்களுக்குள் காதலும் மலர ஆரம்பிக்கிறது.     காயத்ரி கேமிஸ் அவள் ஒரு பேரழகி, பார்க்கும்

ஜெய்பீம் - பலகோடி மக்களின் கண்ணீர்துளி

Image
 எந்த ஒரு படைப்பு நம் ஆழ்மனதை உலுக்குகிறதோ... எந்த ஒரு படைப்பு நம் கண்களில் கண்ணீர் வர வைக்கிறதோ..  எந்த ஒரு படைப்பு நம்மை தூங்கவிடாமல் செய்கிறதோ.. அதுவே ஆகச்சிறந்த படைப்பு! அந்த வகையில் ஜெய்பீம் ஒரு ஆகச்சிறந்த உன்னதமான படைப்பு! அதிகார வர்க்கத்தையும், சாதிய திமிர் கொண்ட மனிதர்களையும் அவர்களின் மனசாட்சியை உலுக்கி கேள்வி எழுப்பி அவர்களை தூங்கவிடாமல் மனிதத்தை துளிர்க்கச் செய்யும் அற்புதமான படம் தான் ஜெய்பீம். உண்மையில் நடந்த  பழங்குடியின மக்களின்(இருளர்) வாழ்க்கையில் இழைக்கப்பட்ட அநீதிகளையும், இன்றும் திக்கற்றவர்களாய் திரியும் அவர்களின் நிலைமையையும் இப்படம் கூறுகிறது. இவர்களுக்கு அப்போது வழக்கறிஞராக போராடிய நீதிபதி சந்துருவாகவே சூர்யா வாழ்ந்திருக்கிறார். படத்தின் ஒவ்வோரு பிரேமும் அருமை. பாம்பு பிடிக்க செல்லும் போது பைக்கில் அமர்ந்து செல்லும் ராஜக்கண்ணு. அணிந்து கொள்ள காலணி கூட இல்லாமல் சைலன்சர் சுட்டுவிடும் என்று அதில் கால் வைக்காமல்  சிரமப்பட்டு உட்கார்ந்து செல்லும் போது அவனின் விழிப்புணர்வான அனிச்சை செயல். அவன் தனக்கு சரிசமமாக அமர்ந்து வருகிறான் என்று சைலன்சரில் அவன் கால் சுட வேண்டும் எ

என்னங்க சார் உங்க சட்டம்

Image
 அன்பு கொண்டவனுக்கு சட்டம் தேவையில்லை..அன்பே மாபெரும் நாகரீகம்.. பொருளாதார அடிப்படையில் ஏழையாக உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லியிருக்கும் படம் தான். என்னங்க சார் உங்க சட்டம். உயர்நிலை என்று சொல்லக்கூடிய பிராமணர்களில் ஒரு பிரிவான சவுண்டிபிராமணர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் வலிகள், அவர்களுடைய வாழ்வியல் சிக்கல் போன்றவற்றை முதன்முறையாக இந்த படம் பேசுகிறது. நந்தன்,நரேன், ஜேபி(தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, உயர்நிலை) இந்த  மூன்று இளைஞர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் அவர்கள் படும் துயரங்களையும் எடுத்துக்கூறும் படமாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதியில் கதாநாயகன் எந்த பொறுப்பும் இல்லாமல், உழைக்காமல் வாழ்க்கையில் சொகுசாக வாழ என்னென்ன முயற்சி செய்கிறான் என்பதை ரசிக்கும்படி கூறியிருக்கிறார்கள். பிராமணப்பெண்ணை அவன் காதலிக்கும் விதமும், இஸ்லாமிய பெண்ணை அவன் காதலிக்கும் விதமும் யதார்த்தம். இப்படத்தில் வரும் என் ஜீரக பிரியாணி பாடல் மனம் விரும்பும் பாடலாக அமைந்துள்ளது.  இஸ்லாமிய பெண்ணிடம் மனம் கொடுத்தபிறகு அவளுக்காக அவன் சுன்னத் செய்

இனி கனவுக்கும் காசு கொடுக்கனும்

Image
 பேஸ்புக் நிறுவனம் அதன் தாய் நிறுவனத்திற்கு மெட்டா என்று பெயர் சூட்டியுள்ளது. மெட்டா என்பதற்கு அப்பால் என்று பொருள். இனி பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா செயல்படப் போகிறது என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் கூறியுள்ளார். மெட்டாவெர்ஸ் என்பதன் சுருக்கமே மெட்டா என்று அழைக்கப்படுகிறது. அதாவது மெய்நிகருக்கு அப்பால். டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் அடுத்த வளர்ச்சியாக நீங்கள் கனவுகாணும் புதிய உலகிற்கு விர்ச்சுவலாக உங்களை அழைத்தும் செல்லும் தொழில்நுட்ப முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதாவது நிஜ உலகில் இருந்து கொண்டே நீங்கள் கனவு உலகத்தில் பயணிக்க முடியும். கனவு உலகத்தில் இருந்து கொண்டே நிஜ உலகில் உள்ள மனிதர்களோடு தொடர்பு கொள்ள முடியும்.      இன்னும் தெளிவாக சொல்லப்போனால், உங்களிடம் ஒரு கண்ணாடி அணிய சொல்வார்கள். உங்கள் செல்போனிலோ அல்லது கணினியிலோ தொடுதிரை வழியாக நீங்கள் விரும்பும் உலகத்திற்கு விரும்பும் மனிதரோடு செல்ல முடியும். நண்பர்களோடு நாம் சேர்ந்து கேம் விளையாடுகிறோம் அல்லவா? அது போன்று. இந்த மெட்டா தொழில்நுட்பத்தில் உங்கள் கனவு

பெண்ணே நீ வாழ்க

Image
ஒவ்வோர் சிற்பத்திற்கும் ஒவ்வோர் கதையுண்டு.என்னுடைய சிற்ப அழகி இவளா என்று மனம் பிசைகிறது! இவளோடு முன் ஜென்மத்தில்  வாழ்ந்தது போன்ற ஓர் நினைவு! அன்பின் இலக்கணமே,  அடி பேரழகு பெண்ணே!  என்னை கொள்ளை கொண்டவளே!  மின்னலை விட ஒளிப்பொருந்திய புன்னகை உடையவளே! உன் அழகினை புகழ்ந்து பாட தமிழில் அந்தம் போதாது. உன் கண்களே சூரியனாக,   நீ இமைதிறக்க, இவ்வூர் விடிகிறது. (சூரியன் உதித்து விட்டதாக மக்கள் எல்லாம் தம் பணியை தொடர்கின்றனர்.) பெண்ணே! நின் பாதம் தொட்ட மண் எல்லாம் மலராகி வர வேண்டும்! தென்றல் அது நீந்தி வர தந்தானா, பாடிவர கேட்பதற்கு நானோடினேன். நின்னையே அது சரிகம (அவள் எங்கே என்று)  கேட்டது, சம,.... சம,.... (சொல்லு,சொல்லு என்று) கெஞ்சியது. ஜுலி ஜுலி நீர் அது தில்லானா  பாடியது  பார்ப்பதற்கு நான் ஓடினேன். நின்னையே தக தை.. (தேடியது) என்றது  தக திமி ( அவள் எங்கே சொல்லு சொல்லு என்று கெஞ்சியது) கேட்டது. அங்கே ஒரு அழகான தோட்டம்,  அதில் நூறு வகையான பூக்கள்..   அந்த பூக்கள்  எல்லாம் என்னுள்ளே பூத்துக்குலுங்க,  அன்பாலே ஒரு பாடல் வடித்தேன்,  அப்பாடலை ஆறேழு பேர் மெச்சக்கூடும்.   ஏன், எல்லோரும் மெச்சினாலும்,  எ

சிரித்திடு மனமே சிரித்திடு!

Image
நம்பினோர் கைவிடும் போதும் நயவஞ்சகம் சூழும் போதும் சிரித்திடு மனமே சிரித்திடு! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி உப்பிற்கு விசமிடும் போதும்  சிரித்திடு மனமே சிரித்திடு! தன் இச்சைக்காக இகழும் போதும் எச்சமாக புகழும் போதும் சிரித்திடு மனமே சிரித்திடு! புறமுதுகிட்டு குத்தும் போதும் சகுனியாய் வெட்டும் போதும் சிரித்திடு மனமே சிரித்திடு! எள்ளி நகையாடும் ஈனர்களையும், உயிரோடு பிணம் தின்னும் கழுகினையும் சிரித்து பொசுக்கிடு.. உன் சிந்தையில் எரித்து நசுக்கிடு!  உன் உயரம் நீ அறிவாய்! உன் உலகம் நீ உணர்வாய்! உப்பில்லா கஞ்சிட்டாலும், உணர்வோடு அகம் மகிழும் அமிர்தம் நீ! ஆயிரம் தடை வரினும்,   அகத்தில்லா இடர் வரினும்  அனைத்தையும் தகர்த்திடு..! புது வரலாறு தடம் பதித்திடு!

கண்ணீர் தொட்டி இல்லை..!

Image
இரண்டு உருண்டை விழுங்கவில்லை, இடிமின்னலுடன் வந்துவிட்டது  வானிலை அறிக்கை! இன்னும் 20 வினாடிகளில்  நினைவு எனும் மின்னல் வெட்டி, இதயத்தில் இடி இடித்து கண்ணீர் மழை பெய்யும்...    அது கன்னம், உதட்டின் வழியாக சென்று உள்ளங்கையை முத்தமிடும். இறுதியாக உடலில் சென்று சங்கமிக்கும்! வானிலை சொல்லி முடிக்கும் முன்பாகவே மழை வந்துவிட்டது! சேமிக்க கண்ணீர் தொட்டி இல்லை, மழையை அருந்தும் சக்கரவாகம் பறவைப்போல கண்ணீரில் கரைந்து உயிர்வாழ்கிறேன்! இது கானம் இசைக்கேட்கும் கண்ணீர் மழை!    அங்கேயும் மழை வரலாம்..!  கைகுட்டை, கண்ணாடியை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்..!

நானும் சீரழிகின்றேன்..!

Image
இன்ஸ்டா, பேஸ்புக்கின் கவர்ச்சி முகங்கள், கண்ணாடி முன் தோன்றும் கலையான முகத்தை வீழ்த்துகிறது! மினிமம் 2 பிரேக்-அப், 1-டேட்டிங்குடன் செல்லும் காதல், உள்ளூர பூத்துக்குலுங்கும் ஒத்த ரோசாக்களை வீழ்த்துகிறது! எலி பாய்ந்தோடு ஒற்றை செங்கல் வீடுகள் பூனை படுத்துறங்கும் மூன்று செங்கல் வீடுகளை வீழ்த்துகிறது!     இஎம்ஐ கார், வீடுகள் எல்லாம் அப்பனும், ஆத்தாளும் கட்டிய அழகு மாளிகையை வீழ்த்துகிறது! மனமில்லா மெகந்தி கோன்கள் மனம் இழுக்கும் மருதாணியை வீழ்த்துகிறது! மனம் மயக்கும் ஹேர்ஸ்பிரே வாசனை  மல்லிகை பூ மணத்தை வீழ்த்துகிறது! நயவஞ்சக நட்புக்கள் எல்லாம், நலம் விரும்பிய தோழர்களை வீழ்த்துகிறது! 5 நிமிட அவசர நூடுல்ஸ் அம்மாவின் கைமணத்தை வீழ்த்துகிறது!     திருப்தியில் சேவை நிறுவனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் மனிதத்தை வீழ்த்துகிறது! தடுமாற மனமில்லா 90’ஸ் எல்லாம் தத்தளித்தே வீழ்கிறது! இவையெல்லாம் வீழ்த்தும் போது நான் மட்டும் மதில் மேல் பூனையாக பாதி கிரீமுடனும், பாதி பவுடருடனும்,  கண்ணாடியிலும், செல்போன் கேமராவிலும் பார்த்து பார்த்து சீரழிகின்றேன்..!

இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கவே முடியலையே

Image
இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கவே முடியலையே..அவங்க எப்போ எத நினைப்பாங்கன்னே சொல்ல முடியாது.. இப்படியா பட்ட புலம்பல்கள் ஆதி காலம் தொடங்கி இன்று வரை ஆண்களின் புலம்பல்களாகவே இருந்து வருகிறது. இதுப்பற்றி எழுதாத புலவர்கள் இல்லை. பாடாத கவிஞர்கள் இல்லை. இன்றும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்..  அப்படித்தான் ஒருவள். அவள் பெயர் அம்மணி(பிராமணப் பெண்) அழகென்றால் அப்படி ஒரு அழகு! நிலாவிற்கு கை, கால் முளைத்த மாதிரி!     அம்மணிக்கு சிறுவயது முதலே இந்த கலாச்சாரம், பண்பாட்டில்  எல்லாம் நாட்டம் கிடையாது.  காரணம் அவளுக்கு  சிறுவயதில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் .. அவற்றுள் சிலவற்றை சொல்கிறேன். 20 வயதில் ஒரு இளம்பெண், ஆற்றங்கரையில் 60 பேர் கூடி இருக்க கணவன் இறந்ததால் அவளுக்கு மொட்டை அடிக்கும் காட்சியை கான்கிறாள், அடுத்தப்படியாக அம்மை வந்து பாதித்த தன் சகப்பள்ளி தோழனை காரணம் கேட்காமலேயே தண்டிக்கும் ஆசிரியரை காண்கிறாள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி தன் ஆடையை கழற்றி விட்டு அம்மணமாக நிற்கும் போது அவளை சுற்றி வெறுமனே நீ புடவை கட்டவில்லை என்றால் உன்னை அடித்து விடுவேன் என்று  மிரட்டும் ஊர் மாமாக்களை காண்கி

இதுதான் நம்ம கலாச்சாரம்

Image
 நீங்க விவசாயியா? அப்படின்னா அறுவடை முடிந்த கையோட ஒரு தங்க நகை எடுத்திருங்க.. நீங்க செட்டிநாட்ட சேர்ந்தவங்களா இருந்தா ஒரு வைர நகை எடுத்திருங்க... தாய்மாமன்னு சும்மா சொல்லிக்கிட்டே இருந்தா போதுமா.. அது நிரூபிக்கனும்னா, ஒரு செயினோ இல்லையினா ஒரு மோதிரமோ உடனே போட்டிடுங்க... அப்பதான் உங்களை மதிப்பாங்க., தாய்மாமன்னு ஒத்துப்பாங்க..வெறுமனே தாய் மாதிரி பாசம் வச்சிட்டா மட்டும் போதாது! அப்புறம் சொல்ல மறந்துட்டேன், கன்னியாகுமரி காரவங்க ஒரு ஆரமோ இல்லையினா ஒரு நெக்லஸோ எடுத்திருங்க... கோயமுத்தூர் காரவங்க எப்போதும் அழகுதான், அவங்க தங்க நகையெல்லாம் வெயிட்டா போடமாட்டாங்க! அது அவுங்களுக்கெல்லாம் பிடிக்காது. அதனால ஒரு 4 கிராமிலையோ இல்லையினா ஒரு அரை பவுனுலையோ  ஏதாவது ஒரு தங்கம் வாங்கிடுங்க,.. தஞ்சாவூர் கார பொண்ணுங்க ஜிமிக்கியோ, கம்மலோ போட்டா அவ்ளோ அழகா இருக்கும். இதுல ஏதாவது ஒன்னு தங்கத்தில எடுத்திருங்க,.. மதுரைக் காரவங்க எப்போதுமே யாருக்குமே குறைஞ்சவங்க கிடையாது. அவங்களுக்கு மதுரை மீனாட்சியே துணை இருக்கனும்னா மரகதம் பதிச்ச ஒரு தங்கத்தை வாங்கிடுங்க.. அப்புறமென்ன? ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கவர் பண்ணிட்டேன்

இரவின் அழகில் மாநகரம்!

Image
 ஏசி கார்களின் அணிவகுப்பு கலர் லைட்டுகளின் ஜொலிஜொலிப்பு மசாலா தடவிய மாமிசங்கள் லிப் லாக் தேவதைகள் கையேந்தும் காதலன்கள் கொசுக்கடியில் கோவிந்தன் தாத்தா, மரத்தடியில் சிமெண்ட் காலுடன் சிறார்கள் உறங்கப்போகும் உற்சாகத்தில் ஜொமைட்டோ ஊழியர்கள் குடிபோதையில் ரோட்டோரம் இளவட்டங்கள் பைக் ரைடில் சில பட்டாம்பூச்சிகள் மழைக்கும் வெயிலுக்கும் மரம் ஒதுங்கா மகாராணி தெருவோரம் ஐஸ்கிரீம் கடைகள் தூக்கத்தை தொலைத்த துரியோதனன்கள் குப்பை கிளறும் நாய்கள் தேம்பி அழும் தேவதாசுகள் முகம் காட்ட மறுக்கும் சந்திரன் இரவின் அழகில் மாநகரம்!

தனிமை கொஞ்சம் இனிப்பு! கொஞ்சம் உப்பு!

Image
 உயிர் தாகம் எடுத்திருக்கும், உள்ளூர துடித்திருக்கும், உடல் விட்ட ஆவிபோல  ஒப்பாரி தான் வைக்கும் தனிமை! நினைவுகள் தொடர்ந்து வர, நிம்மதி இழந்துவிட நீரில்லா மீன்போல, துடியாய் துடித்திருக்கும் தனிமை! கனவுகள் தொடர்ந்து வர, நினைவுகள் நீந்தி வர, காலம் அது கைக்கொட்டி சிரிக்கும் தனிமை! காவியம் பல நினைக்க வைக்கும், கலை நயம் ரசிக்க வைக்கும். கரும்பு சுவை என இனித்திருக்கும் தனிமை! தன்னைத்தானே செதுக்கி வைக்கும், தன்னைத்தானே சிரிக்க வைக்கும், தரணியில் உனக்கு யாரும் இல்லையென  தகைசார் கொள்ளும் தனிமை! வேட்கை தாகம் எடுத்திருக்கும், வீரம் அது செறிந்திருக்கும், இயற்கையோடு காதலிக்கும்  இனிமையான தனிமை! வலிக்கும் மருந்திடும், ஒரு வழியாக மனம் திருந்திடும், தனி அழுகை சுகமாகும், திட்டித்தீர்த்தாலும் திகைப்பான தனிமை! தனிமை கொஞ்சம் இனிப்பு! கொஞ்சம் உப்பு!

கண்ணதாசா வருவாயா?

Image
 கவியரசரே நீர் தொடாத பாகமில்லை, உன்னை தொட எனக்கு பாரமில்லை. உன்னை தொட எனக்கு கவி பாரமில்லை! உனைப்பற்றி எழுத ஓடோடி வந்தேன், பேனாவின் நுனி அது காகிதத்தை முத்தமிட உள்ளுக்குள் ஒப்பனையின் ஓங்கார சண்டை எதை எழுத, வார்த்தை வரவில்லை எனக்கு!   எட்டாத கனியெல்லாம் ஏட்டினில் வைத்தாய், எதுகையும், மோனையும் பாட்டினில் வைத்தாய், எண்ண இனிக்குதடா நெஞ்சம்! ஏகாந்தம் அதற்கென்ன பஞ்சம்! வர்ணனையில் உன் பாடல் கொஞ்சும், உனை வர்ணிக்க தேடுகிறேன் மஞ்சம்! கவி மணக்கும்! காதல் மனம் லயிக்கும்! இதழ் இனிக்கும், இன்பச் சுவை பிறக்கும்! அள்ளி அணைத்திட அரும்பசி தீர்த்திட, திகட்ட, திகட்ட தமிழ் தேன் பருக, அருஞ்சுவையோடு ஆறாத சுவை தந்தாய்! தித்திக்குதடா நெஞ்சம்! திகட்டாத தேனிலவு மஞ்சம்! உன்னோடு நான் அடைந்துவிட்டேன் தஞ்சம்! உன்பாட்டுக்குத்தான் இங்கு பஞ்சம்! காற்றோடு காற்றாகி, கவி உறங்கும் பாட்டாகி என்னோடு நீ கலந்தாய்! எனை அறியாமலே நான் உனை காதலிக்கிறேன். உன் மனம் தொடவே நானும் விழைகிறேன். உனக்கொரு தாசனாய்(கண்ணதாசனுக்கோர் தாசனாய்) கண்ணதாசா வருவாயா?

விளையாட்டை கொண்டாடுவது அபத்தமே.

Image
  நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நண்பர்கள், சிஎஸ்கே ரசிகர்கள் என எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஏன் எனக்கும் கூட மகிழ்ச்சிதான்… ஆனாலும் நண்பர்களின் செயல் என்னை எள்ளி நகையாடவே செய்தது.  அனைவரது செல்போன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் சிஎஸ்கே சாம்பியன் என போஸ்டர்கள். சரி தெரிந்த ஒரு விசயம் தான் அதை ஏன் கொண்டாட வேண்டும். இதனால் என்ன பயன்? பயன் ஏதும் இல்லைதான் ஆனாலும் ஏதோ நான் ஜெயிச்சது போல ஒரு உணர்வு. உண்மையிலேயே நீங்கள்தான் ஜெயித்தீர்களா? என்றால் 100%   இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.    பின்பு ஏன் கொண்டாடுகிறோம். இதுதான் நமக்குள் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் உளவியல் சிக்கல். ஒரு பாட்டா செருப்பின் விலை ரூ.400 இருக்கும். ஆனால் அவர்கள் ரூ.399.99 காசுகள் என போட்டிருப்பார்கள். உண்மையில் நமக்கும் அது தெரியும். ஆனாலும் அது 3 எண்களில் இருப்பதால் 300 சொச்சம் தான் என்று மனம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும். பணம் கொடுக்கும் போது ரூ.400 கொடுப்போம். அதுபோலத்தான் இந்த முரண்பாடும். இந்த வெற்றியின் மூலம் நம் வாழ்வில் ஏதேனும் மாற்றம் வந்துவிடும

நான் பிச்சைக்காரன்.

Image
 சுடர் ஒளி விடும் நெற்றியில் கருப்பு மையிட்டு, கருஞ்சாந்து பொட்டோடு, கமழாத சந்தனத்தை கரைத்து பூசினேன்.முடி சூடிய மன்னனாக தலையில் முண்டாசு தான் கட்டி கழுத்தில் முத்துமணி மாலையுடன் காவி உடை நான் தறித்தேன்! வாழ்ந்தா இவனை போல வாழனும் என்று சிலர்,இவனுக்கு எந்த கவலையும் கிடையாது என்று பலர்,இந்த மாதிரி ஆளாளதான் நாடு முன்னேற மாட்டேங்குது மற்றொருவர் கடுகாய் வெடிக்க,..காலையிலேயே கடுப்பேத்த வந்துவிட்டான்,, பெட்டிக்கடைக்காரர். முகம் திரும்புகையில், கடுகடுத்த முகத்தோடு கரும்புக் கடைக்காரர்! இவனைப்போல வாழ்ந்தா எப்படி இருக்கும் யோசனையில் சிலர், நிம்மதியா தூங்கலாம், நேரத்திற்கு சாப்பிடலாம்! ம்ம்,.. ஏக்கம் அது எட்டிப்பார்க்க!  நானோ .. நாய் அது புடைசூழ  வேட்டையன் ராஜாவை போல் நாலடி எடுத்து வைத்தேன்.      கதிரவன் தன்னொளி பாய்ச்சி கால் அதை கொப்பளிக்க செய்தான். ஒதுங்க மரமில்லை! மனமுமில்லை! தசரதன் அம்பெய்தி துடிக்கும் கண்ணில்லா பெற்றோரை இழந்த பிள்ளையாய்! நானும் பரிதவிப்போடு தோளில் நான்கு பைகளை சுமக்கிறேன். ஒன்றிலோ மணிமாலைகள் என் ஆபரணங்கள், மற்றொன்றிலோ அரும்பசிக்கு உதவும் அன்னம், இப்படி அடுத்தடுத்து நான்கு பை