விளையாட்டை கொண்டாடுவது அபத்தமே.

 நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நண்பர்கள், சிஎஸ்கே ரசிகர்கள் என எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஏன் எனக்கும் கூட மகிழ்ச்சிதான்…ஆனாலும் நண்பர்களின் செயல் என்னை எள்ளி நகையாடவே செய்தது. 

அனைவரது செல்போன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் சிஎஸ்கே சாம்பியன் என போஸ்டர்கள். சரி தெரிந்த ஒரு விசயம் தான் அதை ஏன் கொண்டாட வேண்டும். இதனால் என்ன பயன்? பயன் ஏதும் இல்லைதான் ஆனாலும் ஏதோ நான் ஜெயிச்சது போல ஒரு உணர்வு. உண்மையிலேயே நீங்கள்தான் ஜெயித்தீர்களா? என்றால் 100%  இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

  


பின்பு ஏன் கொண்டாடுகிறோம். இதுதான் நமக்குள் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் உளவியல் சிக்கல். ஒரு பாட்டா செருப்பின் விலை ரூ.400 இருக்கும். ஆனால் அவர்கள் ரூ.399.99 காசுகள் என போட்டிருப்பார்கள். உண்மையில் நமக்கும் அது தெரியும். ஆனாலும் அது 3 எண்களில் இருப்பதால் 300 சொச்சம் தான் என்று மனம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும். பணம் கொடுக்கும் போது ரூ.400 கொடுப்போம். அதுபோலத்தான் இந்த முரண்பாடும்.

இந்த வெற்றியின் மூலம் நம் வாழ்வில் ஏதேனும் மாற்றம் வந்துவிடுமா? அல்லது நம் சமூகத்தில் மாற்றம் வந்துவிடுமா என்றால் நிச்சயமாக இல்லை. பொழுதுபோக்கு தேவைதான். ஒரு பொழுது போக்கிற்க்கு இத்தனை கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் தேவையா? இப்படி நாம் கேள்வி கேட்டாலே பலரும் எரிச்சல் வருகிறது. எப்ப பாரு நம்ம சந்தோசமா இருக்கலாம்னா விடமாட்டேங்கிறான். ஏதாவது ஒன்ன சொல்லிக்கிட்டே இருக்கிறது என்று.

உண்மைதான். சில விசயங்களை  திரும்ப, திரும்ப ஒலிக்கும் போதுதான் அதன் வீரியம் பெருகும். அதுபோலத்தான், இது போன்ற கேள்விகளும். இந்த கேள்விகள்  அதிகமாகும் போது நம்மை ஆசுவாசப்படுத்துவதற்காக  நடராஜன் போன்ற தம்பிகள் வெளியே வருவதற்கு அனுமதிப்பார்கள். அவர்கள் அப்படியே வந்துவிட்டாலும் நின்று நிலைத்திருப்பது கடினம். எனவே நாம் சிலவற்றை விளையாட்டோடு அரசியலையும் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கிறது. 

நாம் விளையாட்டை ரசித்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தான் நமக்கு பின்னால் பல ஆயிரம் கோடிகளில் வணிகம் நடக்கிறது. இவர்கள் கோடிகளில் சம்பாதிக்கும் பணமெல்லாம் எங்கு செல்கிறது? இவர்கள் ஏதேனும் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி அளிக்க போகிறார்களா? அல்லது ஆயிரம் கணக்கான கிராமங்களை  தத்தெடுக்க போகிறார்களா? எதுவும் இல்லை ஆனாலும் நாம் கொண்டாடுகிறோம்.

மறுபுறம்  விளையாட்டை வைத்து அரசியல் நடக்கிறது.

நேற்றைய போட்டியில் திமுகவின் தரம் தாழ்ந்த அரசியலை அப்பட்டமாக காணமுடிந்தது. உள்ளாட்சி தேர்தலில் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு நபர் பாஜக கட்சியை சேர்ந்தவர், ஒரு ஓட்டு வாங்கிவிட்டார் என்பதற்காக  ஒருவர் “ஒரு ஓட்டு பாஜக” என்று பதாகையை காண்பிக்கிறார். அதை துபாயில் உள்ள ஒரு ஸ்டேடியத்தில் இருந்து ஒருவர்  காண்பிக்கிறார் என்றால் இவர் பின்புலம் என்ன? இவர் எதற்காக இந்த பதாகையை காண்பிக்க வேண்டும் என்று நம்மில் எத்தனை பேர் ஆராய்ந்திருப்போம்?

 உண்மையில், இந்த பதாகையின் வெளிப்பாடாக திமுகவின் பயத்தையே காண முடிகிறது. காரணம் 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்கள் வாய்ப்பு கொடுக்காத நிலையில் தற்போதுதான் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க. 

உள்ளாட்சி தேர்தலில் வழக்கமாக ஆளும் கட்சியினரே வெற்றி பெரும் நிலையில் அதை  உடைக்கும் விதமாக 90 வயது பாட்டி, 21 வயது பெண் என பல இடங்களில் சுயேட்சைகள் வெற்றிப்பெற்றுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். ஆக, இதை மறைக்கும் விதமாக  ஒரு ஓட்டு பாஜக எனும் பதாகையை திமுக முன்னெடுக்கிறது. அதிமுக தற்போது பலம் இழந்த நிலையில் எதிர்கட்சியாக பாஜக வருவதற்கே வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. ஏனெனில் அதிமுகவின் கொள்கைகளை  பாஜகவின் கொள்கையில் இருந்து  வேறுபட்டு காண்பதற்கான அறிகுறிகளே இல்லை. இப்படியாக அரசியல் நடந்து கொண்டிருக்க,

 


எனக்கோ எதைஎதையோ நினைத்து பயம் வருகிறது.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குகிறோம் என அறிவிப்பு மட்டுமே வந்து கொண்டிருக்கிறதே தவிர கொடுத்த பாடில்லை. ஒருவேளை( தேர்தல் வருவதற்கு முன்பு) ஒரு வருடத்திற்கு முன்பாக பணத்தை கொடுக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்களோ என்று.

தக்காளி விலை உயர்வு ரூ.100 தொட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் இது எப்போது குறையும் என்ற சிந்தனை.

சமையல் எரிவாயுவிற்கு மானியம் தருவோம் என்றவர்கள் மாறாக நம்மிடம் இருந்து மானியத்தை பிடுங்குகிறார்கள்.இன்னும் அதிகமாக பிடுங்கி விடுவார்களோ என்று,

ஒரு நாளைக்கு 8மணி நேரம்தான் வேலை வாங்க வேண்டும் என்று சட்டம் சொல்லும் போதே இவர்கள் 10-ல் இருந்து 12 மணி நேரம் வரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை வாங்குகிறார்கள்.(சேவைத்துறையில் உள்ளவர்கள் நிலைமை பரிதாபம்)  இந்த நிலையில் புதிதாக 4 நாட்கள் மட்டுமே 12 மணி நேரம் வேலை 3 நாட்கள் விடுமுறை என  புதிய சட்டத்தை அறிவித்து வருகிறார்கள். எங்கே அதையும் பிடுங்கிவிடுவார்களோ என்று.

50 ஆக பெட்ரோல் விலையை குறைப்போம் என்றவர்கள் ரூ.100 ஐ தாண்டி விலையேற்றி  விற்று வருகிறார்கள்.

மிக கொடூர பட்டினி பட்டியலில் இடம்பெற்றுள்ள 31  நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது என்ற ஆய்வறிக்கை.

கூடிய விரைவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். இந்தியாவே இருளில் மூழ்கப்போகிறது என்ற தகவல்கள்.

இப்படி வரிசையாக,.. இதையெல்லாம்  நினைக்கும் போது கொண்டாட்டம் வருமா என்ன?

விளையாட்டை விளையாட்டாக கடந்து போகாமல் அதை கொண்டாடுவது அபத்தமே.

 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி