நான் பிச்சைக்காரன்.
சுடர் ஒளி விடும் நெற்றியில் கருப்பு மையிட்டு, கருஞ்சாந்து பொட்டோடு, கமழாத சந்தனத்தை கரைத்து பூசினேன்.முடி சூடிய மன்னனாக தலையில் முண்டாசு தான் கட்டி கழுத்தில் முத்துமணி மாலையுடன் காவி உடை நான் தறித்தேன்!
வாழ்ந்தா இவனை போல வாழனும் என்று சிலர்,இவனுக்கு எந்த கவலையும் கிடையாது என்று பலர்,இந்த மாதிரி ஆளாளதான் நாடு முன்னேற மாட்டேங்குது மற்றொருவர் கடுகாய் வெடிக்க,..காலையிலேயே கடுப்பேத்த வந்துவிட்டான்,, பெட்டிக்கடைக்காரர்.
முகம் திரும்புகையில்,
கடுகடுத்த முகத்தோடு கரும்புக் கடைக்காரர்! இவனைப்போல வாழ்ந்தா எப்படி இருக்கும் யோசனையில் சிலர், நிம்மதியா தூங்கலாம், நேரத்திற்கு சாப்பிடலாம்! ம்ம்,.. ஏக்கம் அது எட்டிப்பார்க்க! நானோ .. நாய் அது புடைசூழ வேட்டையன் ராஜாவை போல் நாலடி எடுத்து வைத்தேன்.
கதிரவன் தன்னொளி பாய்ச்சி கால் அதை கொப்பளிக்க செய்தான்.
ஒதுங்க மரமில்லை! மனமுமில்லை! தசரதன் அம்பெய்தி துடிக்கும் கண்ணில்லா பெற்றோரை இழந்த பிள்ளையாய்! நானும் பரிதவிப்போடு தோளில் நான்கு பைகளை சுமக்கிறேன். ஒன்றிலோ மணிமாலைகள் என் ஆபரணங்கள், மற்றொன்றிலோ அரும்பசிக்கு உதவும் அன்னம், இப்படி அடுத்தடுத்து நான்கு பைகள்.
சூரியன் சுட்டெரிக்க நான் வைத்த சந்தனத்தை அழித்து விட்ட மகிழ்ச்சியில் உடல் எங்கும் வியர்வை வெள்ளம்! நாவது வறண்டு போக,.. தண்ணீர் தேடிய பறவையாய் அலைகிறேன்!
நான் பிச்சைக்காரன்.
Comments
Post a Comment