என்னங்க சார் உங்க சட்டம்
அன்பு கொண்டவனுக்கு சட்டம் தேவையில்லை..அன்பே மாபெரும் நாகரீகம்.. பொருளாதார அடிப்படையில் ஏழையாக உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லியிருக்கும் படம் தான். என்னங்க சார் உங்க சட்டம்.
உயர்நிலை என்று சொல்லக்கூடிய பிராமணர்களில் ஒரு பிரிவான சவுண்டிபிராமணர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் வலிகள், அவர்களுடைய வாழ்வியல் சிக்கல் போன்றவற்றை முதன்முறையாக இந்த படம் பேசுகிறது. நந்தன்,நரேன், ஜேபி(தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, உயர்நிலை) இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் அவர்கள் படும் துயரங்களையும் எடுத்துக்கூறும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.
படத்தின் முதல் பாதியில் கதாநாயகன் எந்த பொறுப்பும் இல்லாமல், உழைக்காமல் வாழ்க்கையில் சொகுசாக வாழ என்னென்ன முயற்சி செய்கிறான் என்பதை ரசிக்கும்படி கூறியிருக்கிறார்கள். பிராமணப்பெண்ணை அவன் காதலிக்கும் விதமும், இஸ்லாமிய பெண்ணை அவன் காதலிக்கும் விதமும் யதார்த்தம். இப்படத்தில் வரும் என் ஜீரக பிரியாணி பாடல் மனம் விரும்பும் பாடலாக அமைந்துள்ளது.
இஸ்லாமிய பெண்ணிடம் மனம் கொடுத்தபிறகு அவளுக்காக அவன் சுன்னத் செய்வதாகட்டும், ஜெனிலியாவை விரும்பும் போது அவளுக்காக பச்சைக்குத்தி கொள்வதாகட்டும், அவை அனைத்தும் ஆணின் உள் மன பித்தலாட்டங்களின் அழகு.தன் ஜாதியை முன்னேற்றுகிறேன் என்று ஒருவன்(தலித்) யூடியூப் சேனல் ஆரம்பித்து நடத்திவரும் நிலையில் மற்ற சாதிக்காரனை வேலைக்கு எடுக்காமல் புறக்கணிக்கிறான். நடுத்தர ஜாதியில் ஒருவனாக வரும் ஜேபி சப்ஸ்கிரைபர்களை அதிகப்படுத்தும் போது அவனும் ஜேபி வசம் தலை சாய்ப்பதும், வணிக நோக்கத்திற்கு ஆட்பட்டு இனத்தை காட்டிலும் மனம் பணத்தையை விரும்பும் என்று எதார்த்தத்தை காட்டியிருப்பதும் அழகு.
படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை காட்டிலும் முழுக்க முழுக்க சாதியம் பற்றி பேசக்கூடியது.
இந்திய அரசியலமைப்பு சட்டம்
பிரிவு எண் 14- சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
பிரிவு எண் 15- எந்த குடிமகனையும் மதம், இனம், மொழி, சாதி,பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்துவது கூடாது.
பிரிவு எண் 16-பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
கோவிலும், அரசாங்கமும் பொதுவானது, அது எல்லோருக்கும் சமமானது என்று கூறுவார்கள். ஆனால் தற்போது என்ன நடக்கிறது. கோவிலுக்குள் உயர்சாதியினரும், அரசாங்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் வலிமையுள்ளவர்களாக தங்களது ஆளுமையை எவ்வாறு செலுத்துகின்றனர் என்பதை கூறுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து வந்த நந்தனும், உயர்சாதியில் இருந்து வந்த ஜேபியும் என்னென்ன சமூக சிக்கலுக்கும், வலிக்கும் உள்ளாகிறார்கள் என்பதை இருவரின் கோணத்தில் இருந்து எடுத்து கூறியிருப்பது. அனைவரின் இதயத்தையும் ஈரம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தங்கையை படிக்க வைக்க வேண்டும் என்று நரேன் அழும் காட்சியாகட்டும், தங்கை, அண்ணனிடம் இந்த முறையும் என்னை படிக்க வைப்பேன் என்று ஏமாற்றி விடாதே அண்ணா என்று பேசும் வசனங்களும் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள். பொருளாதாரத்தில் பின் தங்கிய தலித்தை, உயர் அதிகாரி நிலையில் உள்ள தலித் புறக்கணிக்கும் போது உயர்சாதி நிலையில் உள்ள ஒரு பெண்மணி அவனை முண்ணுக்கு கொண்டுவர போராடும் போராட்டம், நந்தனை கோயிலின் உள்ளே பூஜை செய்ய அனுமதிக்க கோயில் தர்மகர்த்தாவின் முயற்சி ஆகட்டும் அனைத்தும் நிஜத்தின் யதார்த்தம்.
ஏழை என்றைக்குமே ஏழைதான் என்பதை மூன்று குடும்பங்களின்(SC,BC,OC) வாழ்க்கை முறை கோணங்களில் இருந்து கூறியிருப்பது யதார்த்தத்தின் உச்சம். படம் முடிந்து வெளியே வரும் அனைவரையும் ஏதோ ஒருவகையில் இந்த படம் நிச்சயம் தொந்தரவு செய்யும் என்பதில் மாற்று கருத்தில்லை.
உண்மையில் மனம் என்பது அன்பை மட்டுமே விரும்பும். அன்பிற்கு மட்டுமே பணம்,சாதி, மொழி, இனம் என்று அனைத்தையும் உடைக்கும் சக்தி உண்டு. இதை உணர்ந்த நம் முன்னோர்கள் தான் அன்பே சிவம்(அன்புதான் கடவுள்)என்று கூறினார்கள்.
ராஜா ராணி படத்தில் ஒரு வசனத்தில் முழுப்படமும் அமைந்திருக்கும். (நாம விரும்புனவங்க நம்மல விட்ட போயிட்டா நாமும் போகனும்னு அவசியம் இல்ல, என்னைக்காவது ஒரு நாள் நம்ம வாழ்க்கை நமக்கு பிடிச்ச மாதிரி அமையும்.)
அதுபோல இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஒற்றை வசனத்தில் அமைந்த நிறைவான படம் தான் என்னங்க சார் உங்க சட்டம்.
அன்பு கொண்டவனுக்கு சட்டம் தேவையில்லை..
அன்பே மாபெரும் நாகரீகம்..
அன்பு கொள்வோம், அன்பு ஒன்றுதான் அகிலத்தின் ஆதாரம்!
Comments
Post a Comment