இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கவே முடியலையே
இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கவே முடியலையே..அவங்க எப்போ எத நினைப்பாங்கன்னே சொல்ல முடியாது.. இப்படியா பட்ட புலம்பல்கள் ஆதி காலம் தொடங்கி இன்று வரை ஆண்களின் புலம்பல்களாகவே இருந்து வருகிறது. இதுப்பற்றி எழுதாத புலவர்கள் இல்லை. பாடாத கவிஞர்கள் இல்லை. இன்றும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்..
அப்படித்தான் ஒருவள். அவள் பெயர் அம்மணி(பிராமணப் பெண்) அழகென்றால் அப்படி ஒரு அழகு! நிலாவிற்கு கை, கால் முளைத்த மாதிரி!
அம்மணிக்கு சிறுவயது முதலே இந்த கலாச்சாரம், பண்பாட்டில் எல்லாம் நாட்டம் கிடையாது. காரணம் அவளுக்கு சிறுவயதில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் .. அவற்றுள் சிலவற்றை சொல்கிறேன். 20 வயதில் ஒரு இளம்பெண், ஆற்றங்கரையில் 60 பேர் கூடி இருக்க கணவன் இறந்ததால் அவளுக்கு மொட்டை அடிக்கும் காட்சியை கான்கிறாள், அடுத்தப்படியாக அம்மை வந்து பாதித்த தன் சகப்பள்ளி தோழனை காரணம் கேட்காமலேயே தண்டிக்கும் ஆசிரியரை காண்கிறாள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி தன் ஆடையை கழற்றி விட்டு அம்மணமாக நிற்கும் போது அவளை சுற்றி வெறுமனே நீ புடவை கட்டவில்லை என்றால் உன்னை அடித்து விடுவேன் என்று மிரட்டும் ஊர் மாமாக்களை காண்கிறாள். (அவர்களுக்கு புடவையை அவள் கட்டிவிடக்கூடாது என்பதே உள்ளூர ஆசை) இப்படி வரிசையாக...
அப்போது ஒரு முடிவு எடுக்கிறாள். இனி நம் வாழ்வில் நமக்கு பிடித்தவாறு வாழ்ந்திட வேண்டும் என்று.. உலகை அன்பால் கட்டிப்போட்டுவிட வேண்டும், அதற்கு தன் உடலையும் ஆயுதமாக கொண்டாலும் தவறில்லை என்று முடிவு எடுக்கிறாள்..
அம்மணி வளர்வது எல்லாம் தன் பெரியப்பா வீட்டில் தான். தன் கல்லூரி இளநிலைப் படிப்பை முடிக்கிறாள்.. அவளுக்கு இசை என்றால் அப்படி ஒரு ப்ரியம். மிகவும் பெயர்போன ஒரு இசைக்கலைஞன் இசையில் மயங்குகிறாள்.அவன் பெயர் கோபாலி, அவனுக்கு வயது 47. (கோபாலி பெண் என்றாள் எதுவும் செய்பவன்,அவனுக்கு நன்றாக எழுதப்படிக்க தெரியாது.)அவனுடனான உறவு ஏற்படுகிறது.
தன் இளநிலை முடித்த கையோடு முதுநிலை படிப்பை தொடங்க அன்னவயல் கிராமத்தில் இருந்து சென்னை மேற்கு மாம்பலத்திற்கு செல்கிறாள். (கும்பகோணம் அருகே உள்ள அன்னவயல் கிராமத்தை சேர்ந்தவள்.) அங்கு கோபாலி ஒரு அரண்மனை போன்ற வீட்டில் தனக்கு வைப்பாட்டியாக குடியமர்த்துகிறான். முதுநிலைப்படிப்பை விடுத்து அவனுக்கு வைப்பாட்டியாக அந்த பேரழகி சேவையை தொடர்கிறாள். பின் தான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவளுக்கு தெரியாமல் அவளை கண்காணிப்பதற்காக கோபாலி தன் தூரத்து உறவுக்காரப்பையன் பட்டாபியை பணிக்கு அமர்த்துகிறான்.
அன்றுவரை அவளுக்கு கோபாலி மீது ஈர்ப்பு மட்டுமே இருந்ததே தவிர காதல் இல்லை. ஏனென்றால் அவளின் வயது அப்படி! பட்டாபிக்கும், இவளுக்கும் ஒரே வயது. மாமி என்றே அழைப்பான், ஒருக் கட்டத்தில் அம்மணி வேறு ஒருவனால் வன்புணர்வுக்கு ஆளாகும் போது பட்டாபியே அவளை காப்பாற்றுவான். அன்று முதல் அவன் மீது அவளுக்கு காதல் மலர்ந்துவிடும். பட்டாபியிடம் தன் காதலை வெளிப்படுத்துவாள். அவனுடைய உள் மனது சொல்வது அவனுக்கு தெரியும் தான் ஒரு காவல்காரன். தான் எப்போதும் மாமாவுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று..
ஆனாலும் ஒருக்கட்டத்தில் அம்மணியுடன் நெருங்கிவிடுவான்.. அவளுடன் இணைந்து விடுவான். பின் தான் தவறு செய்துவிட்டதாக அழுது புலம்புவான். அதை பார்க்கும் போது அம்மணிக்கு அவனை மிகவும் பிடித்தும் விடும். அவன் மீதான காதல் இன்னும் அதிகமாகிவிடும். இதற்கிடையில் சங்கீத கச்சேரி இல்லாத நேரத்தில் கோபாலி வீட்டுக்கு வருவான்.
பின் ஒருமுறை வடநாட்டிற்கு 15 நாட்கள் இவளுடன் ஒரு சுற்றுலா செல்கிறான். சுற்றுலா காலங்களில் அவன் முன்னே அம்மணி பட்டாபிக்கு நிறைய கடிதம் எழுதுவாள்.( அவனுக்குத்தான்படிக்க தெரியாதே) சுற்றுலா சென்று திரும்புகையில் அம்மணி சொல்வாள் நான் தனியாக ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டும் என்று.. தனியாகவா என்று கேட்பான் கோபாலி. ஆம் என்பாள். அவனால் அவள் கேட்பதற்கு மறுப்பு சொல்ல முடியாது. அப்படி ஒரு பேரழகி தன் கூட வசிப்பதற்காக அவன் எந்த எல்லைக்கும் செல்வான்.
இதற்கிடையில் அவள் வீட்டு வேலைக்காரனின் திருமணம் நடக்கும், அவன் மனைவி பெயர் ரஞ்சிதம். கருப்பென்றாலும் அவள் அழகில் அம்மணியே மெய்மறந்து போவாள்.. ஏனோ ரஞ்சிதத்தையும் அம்மணிக்கு அளவு கடந்து பிடித்துப்போய்விட்டது. திருமணம் முடிந்த கையோடு ஐரோப்பாவிற்கு புறப்படுவாள். அங்கு இவளுக்கு ஒருத்தோழி உண்டு. அங்கு புரூஸ் என்ற ஒருவன் பழக்கமாவான். இவள் மீது காதல் வயப்படுவான். இருவரும் ஒன்றாக மது அருந்துவார்கள்,விடியும் வரை மனித உறவுகள் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்பொழுது அம்மணிக்கு கோபாலி, பட்டாபி, ரஞ்சிதம் யாருமே நினைவுக்கு வரமாட்டார்கள்.
இப்படியாக பொழுதுகள் கழிந்தோடும்.. ஒருக்கட்டத்தில் புரூஸ் சொல்வான் நானும் உன்னுடன் தமிழ்நாட்டுக்கே வந்துவிடுகிறேன் என்று. அப்போது அவனை தேற்றியவாறு அவனுடன் சில இரவுகள் இணைந்திருப்பாள். பின்பு அவளுக்கு ரஞ்சிதத்தை காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஐரோப்பாவில் இருந்து சென்னைக்கு பறந்து வருவாள். ரஞ்சிதத்தை பார்க்கப்போகிறோம் என்று உள்ளுக்குள் ஒரே ஆனந்தம் அவளுக்கு! ஆனால் ரஞ்சிதம் வீட்டில் இருக்க மாட்டாள். கோபாலி மூலம் அவளுக்கு பாலியல் தொல்லை நடந்தது தெரிய வரும். பின் மனம் நொந்து போவாள். வாழ்வில் அனைத்தையும் அனுபவித்தாகி விட்டது. இனி வாழ்வதற்கு ஒன்றுமில்லை என்று உள்மனது கூறும்.
ரஞ்சிதத்தின் கணவை அழைப்பாள். புதிதாக ஒரு வீடுபாரு என்பாள். அந்த வீட்டில் நான்கு பேர்மட்டுமே இருக்க போகிறோம். நான், ரஞ்சிதம், அவளுடைய கணவன், பட்டாபி, என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வாள். இப்போது அம்மணிக்கு காமம் துளி அளவும் இருக்காது. தான் வைப்பாட்டியாக வாழ்ந்த அந்த அரண்மனை போன்ற வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்வாள்.
அப்போது அந்த அறை முழுதும் ஆயிரம் கேள்விகள் கேட்கும். இதுவரை நீ எப்படி வாழ்ந்து வந்தாய் தெரியுமா? இனி சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறாய்? உன்னைப்பற்றி இந்த சமூகம் என்ன நினைக்கும் தெரியுமா? இனி ஐரோப்பாவிற்கு செல்ல முடியுமா? நினைத்தவுடன் புதுப்புடவை உடுத்த முடியுமா? இப்படி பலக்கேள்விகள்.. அவள் புன்னகைத்தவாறு ஒரே ஒரு பதிலை கூறுவாள். அந்த பதில்....பட்டாபியிடம் கேட்டுச்சொல்கிறேன்.!
(தி.ஜானகிராமன் எழுதிய மரப்பசு நாவலில் இருந்து)
ஒருப்பெண் நான்கு மனநிலையில் பயணிக்கக் கூடிய மன நிலையையும் அது உடனடியாக மாறும் மனநிலையையும் மிக அழகாக கூறியிருப்பார். இந்த கதை 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஒரு முறை நேரம் கிடைத்தால் அம்மணியிடம் பேசிப்பாருங்கள்.
Comments
Post a Comment