மனிதாபிமானமில்லா மத்திய அரசு
மத்திய அரசு மீதான தமிழர்களின் கோபம் நியாயமானது தான் என்பதை நிரூபிக்கும் விதமாக மீண்டும் ஒரு அருவருக்கத்தக்க செயலை மத்திய அரசு செய்துள்ளது. இந்திய குடிமைப்பணிக்கான முதன்மை தேர்வு தொடர்பான அறிக்கைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ இல்லாமல் இந்தியில் இடம்பெற்றிருந்தது. நாடு முழுவதும் 73 மையங்களில் இன்று இத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் சென்னை,கோவை, மதுரை,திருச்சி, வேலூர் என 5 இடங்களில் நடைபெற்றது. தமிழகத்தை சேர்ந்த சுமார் 30,000 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் பெரும்பாலான மையங்களில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்,அவர்களின் இருப்பிடம் குறித்த அறிக்கைகள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இல்லாமல் இந்தியில் இடம் பெற்றிருந்தது.
திட்டமிட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவிப்பு பலகைகள் இந்தியில் இடம்பெற்று இருந்தன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அஞ்சல் அலுவலகங்களில் பணம் அனுப்பும் விண்ணப்பத்தில்(money order form)தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தியில் மட்டுமே அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை விநியோகித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மதுரை எம்பி.சு.வெங்கடேசன் கண்டன அறிக்கை விட்டப்பின் இனி தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட படிவங்களில் தமிழ் இருக்கும் என்றும் இது அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைக்கு வரும் என்று உறுதியளித்தனர்.
அடுத்த பிரச்சனையாக யூனியன் வங்கியின் அறிவிப்பு வெளியானது. அதில் நவராத்திரி முடியும் வரை ஒவ்வொரு நாளும் ஊழியர்கள் அறிக்கையில் கூறப்பட்டது போல் ஒவ்வொரு வண்ணத்தில் உடை அணிந்து வரவேண்டும் என அறிவிப்பை வெளியிட்டனர். அணிந்து வராதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினர். இதுவும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இன்று தனது அறிக்கையை வாபஸ் பெறுவதாக யூனியன் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு நீதிமன்ற போராட்டத்திற்கு பின் சுற்றுச்சூழல் தாக்கல் வரைவு அறிக்கை 2020 ஐ தமிழ் உள்பட 22 மொழிகளில் வெளியிடுவதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது. தற்போது வெளியிட்டுள்ள இந்த வரைவு அறிக்கையில் தமிழ் இணைப்பில் இந்தி மொழி ஆவணத்தை இணைத்திருக்கிறது. இது அனைத்துமே ஏதோ ஒரு அதிகாரியின் பிழையால் ஏற்பட்டது என்று நாம் கூறிவிட முடியாது. அது எப்படி? தமிழ் என்று வரும்போது மட்டும் பிழை வந்துவிடுமா என்ன? இதற்கும் கண்டனம் தெரிவித்து தற்போது மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தவறை சுட்டிக்காட்டி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அடுத்ததாக பெட்ரோல் விலை மாநில அரசு விலையை குறைத்து ரூ.100க்குள் இருக்க முயற்சி செய்தாலும் வேண்டுமென்றே விலையை ஏற்றுகின்றனர். இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.53-க்கு விற்பனையாகிறது. ஒவ்வொரு முறையும் இதுபோன்று தமிழர் நலன்சார்ந்த விசயங்களிலும், தமிழ் மொழியை அழிக்க முற்படும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசுடன் கூட்டணியில் இருக்கும் எந்த ஒரு கட்சியும் இதுவரையில் பெரிதாக கண்டனத்தை தெரிவிக்கவில்லை.
மதத்தின் பெயரால் வட இந்தியாவில் இவர்கள் உருவாக்கி வைத்துள்ள ஒரு கட்டுக்கோப்பை நிலைநிறுத்த அவர்களுக்கு சாதகமாக நம் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டை பிடிங்கி கொடுக்க முயற்சி செய்கின்றனர். இதன் முயற்சியாக தொடர்ந்து மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதத்தில் இந்தி மொழியில் அறிக்கை விடுவது கடைசி நேரத்தில் சிலபசை மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்துமதம் புனிதம் என்று சொல்வார்கள், திராவிட கட்சிகள் தாலி அறுப்பு போராட்டம் செய்யும் போது துடிப்பார்கள். அதே செயலை நீட் எனும் பெயரில் இவர்களும் செய்வார்கள். பெண்கள் காதுகளில் போட்டிருக்கும் கம்மலில் இருந்து ஜிமிக்கி, தாலி வரை அனைத்தையும் பிடுங்கி விட்டு அருத்த முண்டமாக தேர்வு எழுத சொல்வார்கள். கேட்டால் ப்ளூடூத் டெக்னாலஜி கொண்டு காப்பி அடித்து விடுவார்கள் அதை தடுக்கும் விதமாக இவ்வாறு செய்கிறோம் என்பார்கள்.
அப்படி அவர்கள் தொழில் நுட்பத்தை கொண்டு காப்பி அடித்து தேர்வு எழுத முடியும் எனில் தேர்வு அறையில் இருக்கக்கூடிய அதிகாரியின் வேலைதான் என்ன? தேர்வு எழுதுபவர்களை கவனிக்கத்தான் அவரை நியமித்து அதற்கு தனியாக சம்பளம் வேறு வழங்குகிறோம். அதை விட அவர் வேறு என்ன பணி செய்கிறார்? பின் பறக்கும் படை, கேமரா இதெல்லாம் எதற்கு? இது போன்ற கேள்விகளுக்கும் இவர்களால் பதில் சொல்ல முடியாது.
இவர்கள் நோக்கம் தமிழக மாணவர்கள் இந்திய அரசின் உயர்பதவிகளுக்கு வந்து விடக் கூடாது. அப்படி அவர்கள் வந்துவிட்டால் அய்யா அப்துல்கலாம் போன்று அசைக்கமுடியாத ஆளுமைகள் ஆகி விடுவார்களோ என்ற பயம். கேள்வி கேட்டு திக்குமுக்காட செய்வார்கள் என்ற வேதனை. முன்னாள் சிபிஐ இயக்குனர் ரகோத்தமன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். குடிமைப்பணி தேர்வு பயிற்சியின் போது அண்ணா இறந்துவிட்டார். அதை இவர்கள்(வட இந்தியர்கள், அப்போது காங்கிரஸ் ஆட்சி) பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நாங்கள்(தமிழக மாணவர்கள்) அன்று எதையும் சாப்பிடவில்லை உண்ணாவிரதம் இருந்தோம் என்று. அன்று அண்ணா ஆரம்பித்து வைத்த தமிழ் முழக்கம் இன்று வரை எதிரொளிக்கிறது. இதன் வெளிப்பாடாகவே இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் தமிழ் மாணவர்கள் எந்த சலசலப்புக்கும் அஞ்சாதவர்கள், தாங்கள் கொண்ட இலக்கை அடைவதில் குறியாக உள்ளவர்கள். இதை பார்க்கும் போது பாரதி பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
அக்கினி குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தமிழ் அது தனித்திருக்கும்!
தமிழ் அது நிலைத்திருக்கும்.!
தமிழ் அது பொறுத்திருக்கும்!
தமிழை அழிக்க நினைத்தால் அது எரித்திருக்கும்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
Comments
Post a Comment