சாயாத தோணி
பெண் என்பவள் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறாள். தான் கொண்ட கொள்கை தவறு என தெரிந்தும் கூட அதை நிலைநிறுத்த தான் கொண்ட உறுதிப்பாட்டில் உறுதியாக இருக்கிறாள். விளைவு ஆண்களுக்கு சாதகமாகவும், தனக்கு பாதகமாகவும் போய் விடுகிறது. அந்த வகையில் பெண்ணின் வாழ்வை மையப்படுத்தி வந்த ஒரு திரைப்படம் என்னை மிகவும் பாதித்த ஒரு திரைப்படம்.
30 வயதை கடந்த பெண்ணொருத்தி (அழகு என்றால் அவள் தான் அப்படி ஒரு அழகு, பார்த்தாலே மனம் பரவசமடைந்து விடும். ஆனாலும் தான் கொண்ட அழகை அவள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை). பல கனவுகளுடன் திருமண ஏக்கத்தோடு இருந்தாலும் தன் குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கைகள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த உடனே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறாள்.
தந்தை இல்லாத குடும்பத்தில் தாய் மட்டுமே தலைவியாக இருக்கும் போது அந்த தலைவி பொறுப்பை ஏற்றவள். தன் தியாகம் தொடர... ஒருக் கட்டத்தில் தங்கைக்கு வலையணி விழா. அதற்கு அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும் என்று அம்மா ஒரு லிஸ்ட் போட ஒரு நிமிடம் தனை மறந்தவளாய் அம்மாவையே பார்க்கிறாள். மூத்தவள் ஒருவள் இருக்கிறாள் அவளுக்கும் இது போன்ற ஆசைகள் இருக்காதா? அம்மா தன்னை ஒரு பணம் சம்பாதித்து கொடுக்கும் இயந்திரமாகவே கருதுகிறாள். தன்னை மறந்து விட்டாள் என்று உள்மனம் சொல்லியது.
உண்மைதான். மனித மனம் மிகவும் கீழ்தரமானது. அது சுயநலத்தை மட்டுமே நோக்கி ஓடிக்கொண்டிருக்கும். ஒருவன் தியாகம் செய்ய துணிந்து விட்டால் அவன் யாருக்காக அந்த தியாகத்தை செய்கிறானோ அவர்களே அந்த தியாகத்தை அங்கீகரிக்க மாட்டார்கள். தியாகம் செய்பவர்கள் பெறுவது கூடுதல் வலி மட்டுமே.
தன்னைப்பற்றி சிந்திக்கிறாள், தனக்கும் ஒரு துணை வேண்டும் என்று நினைக்கிறாள். துணையை தேடும் பயணத்தில் ஒருவனது பேச்சில் ஈர்க்கப்படுகிறாள்.
இதற்கிடையில் அரிதாக நல்ல குணங்களுடன் (teetotaler)கூடிய ஒரு பணக்கார வாலிபன் இவளை ஒரு தலையாக காதலித்து வருகிறான். இவன் காதலை தெரிவிப்பதற்கு முன்பாக பேச்சால் ஈர்க்கப்பட்ட அந்த ஒருவனுடன் அடிக்கடி உரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒருக் கட்டத்தில் அந்த பணக்கார இளைஞன் தன் காதலை இவளிடம் தெரிவிக்க காதலை மறுத்து விடுகிறாள். நான் ஒருவனை விரும்புவதாகவும் அவனையே மனம் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகிறாள்.
இவனும் தன் காதலியின் நலம் விரும்பி முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்கிறான். பின் வழக்கமாக வரும் குடும்ப சண்டைகள் தாம்பத்தியம் எனும் முடிச்சியினால் மெல்ல மெல்ல நகர்ந்து வாழ்க்கை பயணம் தொடர்கிறது. அந்த பணக்கார வாலிபன் தன் காதலை எண்ணி இவளுக்காக கட்டிய மனக்கோட்டையின் நினைவுகளில் இவளை மறக்க இயலாதவனாய் ஊரை விட்டு வெளிநாட்டிற்கு சென்று விடுகிறான்.
மாதங்கள் செல்கிறது, இரண்டு, மூன்று, நான்கு என்று பின் மெல்ல, மெல்ல தெரிகிறது. தான் தவறான ஆளை தேர்ந்தெடுத்து விட்டோம் என்று. கணவன் நடத்தையில் சந்தேகம், இரவில் வேலை என்று சொல்லிவிட்டு பகலில் மட்டுமே வீட்டில் இருப்பது. இரவானால் தான் செக்யூரிட்டி வேலை செல்வதாக கூறி சென்று விடுவான்.
பின் ஒருக்கட்டத்தில் செக்யூரிட்டி வேலைக்கும் கூட செல்லவில்லை என்ற உண்மை தெரிய வரும். அவன் ஏற்கனவே ஒரு முஸ்லீம் பெண்ணை திருமனம் செய்து இருப்பான் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும். (இவள் சம்பாத்தியத்தில் இரண்டு குடும்பத்தையும் நடத்த வேண்டும் என்ற சுயநலத்தில் மட்டுமே இவளை பின் தொடர்ந்து காதல் என்ற வலை வீசி, வீழ்த்தி திருமணம் செய்திருப்பான்.)
பல்வேறு துன்பத்தை கடந்தும் அவள் வாழ்வில் துன்பம் தீர்ந்தபாடில்லை. அவள் விரும்புகிறாளோ இல்லையோ துன்பம் அவளை விரும்புகிறது. 30 வயதிற்கு மேல் திருமணம் நடந்தும் தொடர முடியாத திருமண வாழ்க்கை. அவளுக்கென்று ஆறுதல் சொல்ல ஒருவர் கூட இல்லாத நிலை . ஒரே ஒரு உயிர் தோழி மட்டும் இருப்பாள். தன் சுகத்துக்கங்களை அவளுடன் பகிரும் இவள், அனைவரையும் வெறுத்தவளாய், இந்த மனித சமூகமே வேண்டாம் என்று முடிவு செய்து தற்கொலைக்கு முடிவு செய்கிறாள்.
தண்டாவாளத்தில் அடிப்பட்டு இறக்க வேண்டும் அப்போதுதான் தன் உடல் இவர்களுக்கு கிடைக்காது, சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கும் என்று யோசிக்கிறாள். அப்படி ஒரு மனவேதனை. தற்கொலை செய்ய தீர்மானித்து ரயில் நிலையம் செல்கிறாள். அங்கு ரயில் வருகிறது. முகத்தில் ஒரு மகிழ்ச்சி சாகப்போகிறோம் என்று! ஆம் சாவும் கூட ஒரு சுகம்தான். சாவத்திற்கு முன்பாக கழுத்தில் ஒரு 2 பவுண் தங்க சங்கிலி கிடக்கிறது. அது யாருக்காவது உபயோகம் ஆகட்டுமே என்று நினைக்கிறாள். (சாவதற்கு முன்பும் கூட அப்படியொரு பால் மனம் அவளுக்கு)
அருகில் பெண்ணொருத்தி சித்த பிரம்மை பிடித்தவளாய் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருக்க( யாரோ ஒருவன் இவளை ஏமாற்றி குழந்தை கொடுத்திருக்க வேண்டும், அல்லது யாரோ ஒருவன் இவள் வாழ்க்கையை மோசம் செய்திருக்க வேண்டும்) அவள் குழந்தையை உற்று நோக்குகிறாள். குழந்தையை முத்தமிடுகிறாள். தான் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை தாயின் கழுத்தில் மாட்டிவிட தாய் மறுக்கிறாள். அவளை சமாதானம் செய்து தங்க சங்கிலியை மாட்டிவிட... சங்கு ஊதும் சத்தம் கேட்கிறது. இவள் உள்ளம் ஏதோ ஒரு பெரும் சுகம் பெறப்போகிறோம் என்று உள்ளுக்குள் மகிழ்ச்சி!
ரயில் வருகிறது., இவளை நெருங்குகிறது.. ரயில் முன் பாய்கிறாள். கண் இமைக்கும் அந்த கணநேரத்தில் இவளை இழுத்து காப்பாற்றி தான் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறாள் அந்த குழந்தையின் தாய்.
இது எல்லாம் அந்த ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. அப்போது தாயை பிறிந்த அந்த குழந்தை அழும் சத்தம் கீச்சிடுகிறது.. குழந்தையை கையில் ஏந்துகிறாள், அந்த ஊரை விட்டு யாருக்கும் தெரியாமல் வேறு ஊருக்கு செல்ல பேருந்தில் அமர்கிறாள்.. (இனி அவள் வாழ்க்கை அந்த குழந்தைக்கானது) பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது..
அவர்கள் யாரும் நான் சாகும் வரை (தம்பி, தங்கை,தாய் உட்பட) இனி என் வாழ்வில் வரக்கூடாது என்று எண்ணி உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருக்க.. பேருந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. சுயநினைவு திரும்பியவளாய்.. விழித்து பார்க்கிறாள்! சாவு ஊர்வலம் ஒன்று இவள் பேருந்தை கடக்கிறது. இவளின் சாவு ஊர்வலம் தான் அது. எல்லோரும் அழுது வர தோழி மட்டும் கூடுதலாக துடிக்கிறாள்..
(தான் அணிவித்த அந்த தங்கச் சங்கிலியை வைத்து இறந்தது, இவள் தான் என்று நினைத்துவிட்டார்கள், உடல் சிதைந்து போனதால் யாருக்கும் இவளை அடையாளம் தெரியவில்லை) அவளும், அவர்களை பொறுத்தவரை தான் இறந்து போனதாகவே இருக்கட்டும் என்று எண்ணி பயணத்தை தொடர்கிறாள்.
(வேற்று மொழியில் வந்த ஒரு திரைப்படம் இதில் கதாநாயகியாக சவுந்தர்யா நடித்திருப்பார்)
Comments
Post a Comment