தமிழ் தேசியமா? திராவிட தேசியமா?

தமிழ் தேசியமா?  திராவிட தேசியமா? என்ற விவாதம் பெரும் விவாதமாக தற்போது நடந்து வருகிறது. தமிழ் தேசியம் விரும்பும் அன்பர்கள் மறைமுகமாக மத அரசியலை முன்னெடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு காரணம் இனி தமிழர்கள் தமிழ் இந்துக்கள், ஆரிய இந்துக்கள் என்று கூறுங்கள் என்று மணியரசன் போன்றோர் புதிதாக ஒன்றை கற்பிக்கிறார்கள்.  மறுபுறம் சீமான் முருகனை வசைப்பாடி முடிந்தபின் முருகன் எங்கள் முப்பாட்டன் என்று கூறுகிறார். 

இவர்கள் கூறுவதற்காக நாம் தமிழ்தேசியத்தை வேண்டாம் என்றும் கூற முடியாது. ஏனெனில் தமிழ்தேசியம் என்பது இவர்களுக்கு மட்டுமே சொந்தமான கருத்தியல் கிடையாது. இது காலம் காலமாக இங்கு தொன்று தொட்டு இருந்து வருவது. சரி, மாறி, மாறி ஆட்சி செய்து இன்று ஆட்சியில் இருக்கும் திராவிட இயக்கங்கள் தங்கள் பணியை சரியாக செய்தார்களா? அதுவும் இல்லை. திராவிடம் என்று சொல்லிக்கொண்டு மதநல்லிணக்கம் என்பார்கள், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்றால் கேக் சாப்பிடவும், நோன்பு கஞ்சி அருந்தவும் சென்று விடுவார்கள். ஆனால் நாங்கள் மத அரசியலை விரும்புவதில்லை என்று கூறுவார்கள். 


                        



இவர்கள் வேண்டாம் என்று பாஜக போன்ற கட்சிகளை ஆதரிக்கலாம் என்றால் அவர்கள் பழமைவாதிகள், மீண்டும் தேவதாசி முறை வேண்டும் என்று விரும்புபவர்கள்,மத அரசியலை விரும்புபவர்கள், நாம் பண்பட்டு உலக அரங்கிற்கு இணையாக போட்டியிட்டு வளர்ந்து வந்து நிற்கும் இந்த காலக்கட்டத்தில்   இவர்கள் நம்மை பின்னோக்கி அழைத்து சென்று விடுவார்கள், இதை தெளிவாக அறிந்த நம் மக்கள்தான் இம்முறை திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். 

இலங்கையில் தமிழ் இனமக்கள் படுகொலை செய்யப்பட்ட போது நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி இங்கு செம்மொழி மாநாடு நடத்திக் கொண்டு இருந்தவர்கள், இந்தி என்ற ஒற்றை எதிர்ப்பின் மூலம் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் உயர்வுக்கு மறைமுகமாக துணை நின்றார்கள். இவற்றின் விளைவு ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகளை தடுத்து நிறுத்தியது. 

இந்த ஜவஹர் நவோதயா பள்ளிகள் 6-முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சிபிஎஸ்இ-க்கு இணையான கல்வியை வழங்குகின்றன. படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய மாணவர்கள் நுழைவுத்தேர்வின் மூலம் இந்த பள்ளிகளில் சேர முடியும். இங்கு தாய்மொழி பயிற்று மொழியாக இருக்கும். அதன்பிறகு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் வழியாகவும் சமூக அறிவியல் பாடங்கள் இந்தி அல்லது ஆங்கிலம் வழியாகவும் பயிற்றுவிக்கப்படும்.இங்கு மாணவர்கள் தங்கி பயில உண்டு உறைவிட வசதியும் உண்டு.


             



இங்கு மாதத்திற்கு குறைந்த பட்சமாக ரூ.600-ம் அதிகப்பட்சமாக ரூ.1500-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  (தற்போது தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.) தமிழ்நாட்டை தவிர்த்து இந்தியா முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்ட நவோதயா பள்ளிகள் உள்ளன. கர்நாடகாவில் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சமாக ஒரு நவோதயா பள்ளிகளை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 500 மாணவர்கள் பயில முடியும் என்றால் ஓர் ஆண்டிற்கு சுமார் 20,000 மாணவர்கள் பயில முடியும். 

இதற்கு எதிராக தமிழ் தேசியம் பேசக்கூடிய ஆதரவாளர்கள் இன்றுவரை  பெரிதாக குரல் கொடுத்ததாக தெரியவில்லை. நம் வரிப்பணத்தில் நம் கட்டமைப்புகளை ஏற்படுத்தி மருத்துவ கல்லூரிகளை துவக்கினால் எனக்கும் இடம் வேண்டும் என்று வடமாநிலத்தவர்கள் இங்கு போட்டிக்கு வந்து ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினை பெற்று பயனடைகின்றனர். விளைவு நீட் போன்ற மருத்துவ தேர்வுகள்.  அப்படி எனில் நம் மாணவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் நவோதயா பள்ளிகள் மூலம் பயனடைவதில் என்ன சிக்கல் இருந்துவிடப்போகிறது. 

இப்படி ஏராளமாக திராவிட கட்சிகள் செய்த பிழைகள், ஊழல்கள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். இருப்பினும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இங்கு திராவிட கட்சிகள் ஆற்றிய பங்கு எதுவும் இல்லை என்று  நாம் மறுத்து விட இயலாது. அதே சமயம் அவர்கள் செய்யும் தவறை எதிர்த்து கேள்விகேட்க தமிழ்தேசியமும்  தேவைப்படுகிறது. 

திராவிடம் என்ற ஒன்று தமிழ் இல்லாமல் இல்லை. தமிழ் எப்போது புறக்கணிக்கப்படுகிறதோ? அப்போது திராவிடம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும் அதை திராவிட கட்சிகள் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனினும் ஒட்டுமொத்த இந்தியாவில் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் போது (அரசின் பொது சொத்துக்கள் ஏலம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு)  130 கோடி இந்தியர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது அதை எதிர்த்து கேள்வி கேட்க 8.5 கோடி மக்களை மட்டுமே கொண்ட தமிழ்தேசியத்தால் சாதித்துவிட முடியாது. 

ஆக இந்த 130 கோடியில் 25 சதவீத மக்களின் குறைந்தபட்ச எதிர்ப்பாவது தேவைப்படுகிறது. அவ்வாறு தேவைப்படும் போது நாம் திராவிடர்களாக( தென்னிந்திய மக்களாக) குரல் கொடுக்க வேண்டிய  தேவை ஏற்படுகிறது.  அவ்வாறு குரல் கொடுக்கும் பட்சத்தில் மேற்கு வங்கம் போன்ற மாநில மக்கள் நம்முடன் இணைவார்கள். மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த தயங்குவார்கள்.

என்னை பொருத்தவரை திராவிடம் என்பது தமிழ் எனும் உடல் போர்த்திக்கொண்டிருக்கும்  ஆடை. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழுக்கும், திராவிடத்திற்கும் பொருந்தும். 

யாதும் ஊரே... யாவரும் கேளிர்.

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி