ஒரு கவிஞனின் மன உளைச்சல்!

நண்பன் சொன்னான்.. கவிஞன் என்றால் மன உளைச்சலில் இருப்பவன் என்று! ஆம் உண்மைதான்..!

அன்பில்லா மனிதரை காணும் போதும் 

அறம் அது பிறழும்போதும் 

மனம் அது பதைபதைக்கிறது!

ஆணவம் ஆர்பரிக்கும் போதும்

அன்பினை அத்துமீறும் போதும்..

மனம் அது பதைபதைக்கிறது!

அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வராத போதும்,

ஆர்யன் கான் போன்று அப்பா இல்லாத

அனாதையாய் குழந்தைகளை  பார்க்கும் போதும்,

மனம் அது பதைபதைக்கிறது!

         


இதய வீணை அறுபடும் போதும்..

இதழ்மொழி மவுனத்தின் போதும் ..

மனம் அது பதைபதைக்கிறது!

ஈன்றவளை இழிநிலைக்கும் தள்ளும்போதும்,

ஈகையில்லா பெருமகனை இன்னுயிர் தாங்கும் போதும்,

மனம் அது பதைபதைக்கிறது!

உத்தமர் போல் நடித்து ஊருக்குத்தான் உபதேசம்

தனக்கில்லை எனும் போது,

மனம் அது பதைபதைக்கிறது!

எல்லையில்லா வான்மகள் எனக்கு மட்டும்தான் 

சொந்தம் என எலான் மஸ்க் கூறும் போதும் 

மனம் அது பதைபதைக்கிறது!

ஏணி போல் ஏற்றி விட்டவரை எட்டி உதைக்கும் போது,

மனம் அது பதைபதைக்கிறது!

புஷ்பவதியவள் பூப்பெய்தி விட்டாள் என்று 

புண்ணியக் கதைக்கூறி புறந்தள்ளி ஒதுக்கும் போது

மனம் அது பதைபதைக்கிறது!

         


சாதிமோதலின் போதும் மதமோதலின் போதும்,

மரணம் அது சம்பவிக்கும் போது

மனம் அது பதைபதைக்கிறது!

மனித விலங்காய், மலம் அள்ளும் சாக்கடையில்,

மாற்று உடையின்றி சவுக்காரம் தறிக்கும் போது.

மனம் அது பதைபதைக்கிறது!

இன்பத்தம்பதிகள் இல்லறத்தை பிரியும் போது,

மனம் அது பதைபதைக்கிறது!

தென்றல் குளிராய் மாற.. தீபம் கொழுந்துவிட்டு எரிய,

மனம் அது பதைபதைக்கிறது!

போலிச்சாமியாரை பொதுமக்கள் புகழும் போதும்,

போக்கிரியை(பொம்பள பொருக்கியை) புனிதன் என்று தாங்கும்போதும்,

மனம் அது பதைபதைக்கிறது!

     


கவிமகன் கலை இழக்கும் போதும்,

கலைமகள் காசுக்கு விற்கப்படும் போதும்,

மனம் அது பதைபதைக்கிறது!

இணையம் இல்லா கிராமம் கோடியாய் இங்கிருக்க,

டிஜிட்டல் காயின் அது டிஜிட் அடிக்கும் போது,

மனம் அது பதைபதைக்கிறது!


இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...

இதையெல்லாம் காணும் போது மனம் எனும் உலை பற்றி எரியத்தான் செய்யும்! அதனால் மனம் உளைச்சல் அடையத்தான் செய்யும்!

மனித சமூகத்தோடு எப்பொழுது உன்னால் ஒட்டி வாழ முடியவில்லையோ நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம் என காரல் மார்க்ஸ் கூறுகிறான்!

பலவித்தை கற்றிருந்தும் உலகத்தோடு ஒட்டி வாழவில்லை எனில் கற்றும் பயனில்லை! அவன் அறிவில்லாதவன் என்று வள்ளுவன் கூறுகிறான்!

யாரை பின்பற்றுவது? நானோ குழப்பத்தில்....!

(மன உளைச்சல் இன்னும் அதிகமாகிறது......!)


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி